புதிய பெர்மிட் வழங்குவதை நிறுத்தக்கோரி வாகன பேரணி


புதிய பெர்மிட் வழங்குவதை நிறுத்தக்கோரி வாகன பேரணி
x
தினத்தந்தி 1 March 2017 4:15 AM IST (Updated: 1 March 2017 4:51 AM IST)
t-max-icont-min-icon

புதிய பெர்மிட் வழங்குவதை நிறுத்தக்கோரி வாகன பேரணி நடத்த ஆட்டோ டிரைவர்கள் சங்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆலோசனை கூட்டம்

கூடலூர் நகர பகுதியில் 1,500 ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக கணக்கிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நாளுக்குநாள் புதிய ஆட்டோக்கள் இயக்க பெர்மிட் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் நகர பகுதியில் வாகனங்களை நிறுத்த போதிய இடமும் இல்லை. மேலும் புதிய ஆட்டோக்களின் வரத்து அதிகமாக உள்ளதால் தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதாக கூறி ஆட்டோ டிரைவர்கள் கடந்த மாதம் 6–ந் தேதி கூடலூர், பந்தலூர் தாலுகா முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஆட்டோ டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் கூடலூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்க தலைவர் முருகானந்தகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் முரளி, பொருளாளர் சிவசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வாகன பேரணி நடத்த முடிவு

கூட்டத்தில் சங்க செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், சட்ட ஆலோசகரை தேர்வு செய்வது, அனைத்து ஆட்டோ டிரைவர்களும் கண்டிப்பாக சீருடை அணிந்து வாகனத்தை இயக்குவது. அவ்வாறு சீருடை அணியாமல் ஆட்டோவை இயக்கும் டிரைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏப்ரல் முதல் வாரத்தில் சங்கத்தில் பதிவு செய்துள்ள ஆட்டோக்களுக்கு வாகன போக்குவரத்து ஆய்வாளர், போலீஸ் இன்ஸ்பெக்டரை கொண்டு தணிக்கை செய்து சங்க ஸ்டிக்கரை ஒட்டுவது. மே மாதம் சங்க கொடியை அறிமுகப்படுத்தும் விழா நடத்துவது. புதிய ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்குவதை மாவட்ட நிர்வாகம் நிறுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லை எனில் புதிய பெர்மிட் வழங்குவதை நிறுத்த கோரி கூடலூர், பந்தலூர் தாலுகாவில் வாகன பேரணி நடத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் கூடலூர் நகரில் உள்ள 22 ஆட்டோ நிறுத்தும் மையத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக சங்க நிர்வாகி ராஜா வரவேற்றார். முடிவில் அரிகிருஷ்ணன் நன்றி கூறினார்.


Next Story