கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் சாவு வறட்சியால் தண்ணீர் தேடி வந்தபோது பரிதாபம்


கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் சாவு வறட்சியால் தண்ணீர் தேடி வந்தபோது பரிதாபம்
x
தினத்தந்தி 1 March 2017 4:15 AM IST (Updated: 1 March 2017 5:08 AM IST)
t-max-icont-min-icon

தொட்டியம் அருகே மலைப்பகுதியில் வறட்சியால் தண்ணீர் தேடி ஊருக்குள் வந்தபோது கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் பரிதாபமாக செத்தது.

தொட்டியம்,

கிணற்றில் தவறி விழுந்தது

திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த முள்ளிப்பாடி ஊராட்சியில் உள்ள திருஈங்கோய்மலை பகுதியில் மான்கள் அதிக அளவில் வசித்து வருகின்றன. தற்போது மலைப்பகுதியில் வறட்சியின் காரணமாக தண்ணீர் தேடி மான்கள் ஊருக்குள் வருகின்றன. அதன்படி அந்த மலைப்பகுதியில் இருந்து நேற்று காலை ஒரு வயதுடைய ஆண் புள்ளிமான் ஒன்று தண்ணீர் தேடி முள்ளிப்பாடி கிராமத்திற்குள் வந்தது. அங்கு காட்டுமாரியம்மன் கோவில் அருகில் உள்ள ஒரு தோட்டத்தில் சென்றபோது, அங்குள்ள கிணற்றில் அந்த புள்ளிமான் தவறி விழுந்தது.

இது குறித்து தகவல் அறிந்த முள்ளிப்பாடி கிராம நிர்வாக அலுவலர் கலைவாணி முசிறி தீயணைப்பு துறையினருக்கும், துறையூர் வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தார்.

புள்ளிமான் சாவு

இதையடுத்து அங்கு வந்த முசிறி தீயணைப்பு துறையினர் கிணற்றுக்குள் இறங்கி, தண்ணீரில் தத்தளித்து உயிருக்கு போராடிய புள்ளிமானை மீட்டு மேலே கொண்டு வந்தனர். ஆனால் சிறிது நேரத்தில் அந்த புள்ளிமான் செத்தது.

இதைத்தொடர்ந்து வனக்காவலர் சுப்பிரமணி முன்னிலையில் அலகரை கால்நடை மருத்துவர் பாரிவேல், சம்பவ இடத்திலேயே புள்ளிமானை பிரேத பரிசோதனை செய்தார். பின்னர் அருகில் இருந்த மயானத்தில் புள்ளிமானின் உடலை புதைத்தனர்.


Next Story