கொடுங்கையூரில் குழந்தை பிறந்த 12 நாளில் பெண் மர்மச்சாவு


கொடுங்கையூரில் குழந்தை பிறந்த 12 நாளில் பெண் மர்மச்சாவு
x
தினத்தந்தி 1 March 2017 10:23 AM IST (Updated: 1 March 2017 10:22 AM IST)
t-max-icont-min-icon

கொடுங்கையூரில் குழந்தை பிறந்த 12 நாளில் பெண் மர்மமான முறையில் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

பெரம்பூர்,

அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அறுவை சிகிச்சை

சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் காமுண்டீஸ்வரன். மத்திய அரசு ஊழியர். இவருடைய மனைவி கோட்டீஸ்வரி. இவர்களின் மகள் ஸ்ரீதேவி (வயது 28). இவருக்கும், பெரம்பூரை சேர்ந்த மதன்குமாருக்கும் (32) ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. பெங்களூரில் உள்ள தனியார் வங்கியில் மதன்குமார் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

இதனிடையே 12 நாட்களுக்கு முன்பு ஸ்ரீதேவிக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. அறுவை சிகிச்சை செய்த நாள் முதல் ஸ்ரீதேவிக்கு வயிற்றில் வலி இருந்து வந்ததாக தெரிகிறது.

பிணமாக கிடந்தார்

தன்னுடைய தாய் வீட்டில் இருந்த ஸ்ரீதேவி நேற்று முன்தினம் இரவு வயிற்று வலியால் நீண்ட நேரம் தூங்காமல் இருந்து வந்தார். திடீரென நள்ளிரவில் அவரை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கோட்டீஸ்வரி மகளை தேடிப்பார்த்தார்.

இந்நிலையில் நேற்று காலை எதிர்வீட்டு சுற்றுச்சுவர் உள்ளே தலையில் காயத்துடன் ஸ்ரீதேவி பிணமாக கிடந்தார். மகளின் உடலை பார்த்து கோட்டீஸ்வரி கதறி அழுதார்.

போலீஸ் விசாரணை

இது பற்றி தகவல் அறிந்த கொடுங்கையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஸ்ரீதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஸ்ரீதேவி மர்மச்சாவு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வயிற்று வலி காரணமாக எதிர்வீட்டு மாடியில் இருந்து அவர் தற்கொலை செய்துகொண்டாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story