பள்ளி தலைமை ஆசிரியை வீட்டில் 10 பவுன் நகை, மொபட் திருட்டு
பள்ளி தலைமைஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, மொபட்டை திருடிச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் பள்ளி தலைமைஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, மொபட்டை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–
பள்ளி தலைமை ஆசிரியைதிருவண்ணாமலை அண்ணாநகர் 7–வது தெரு நடராஜர் நகரை சேர்ந்தவர் வாசுகி (வயது 56). இவர் திருவண்ணாமலை நகராட்சி தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று வாசுகி வீட்டை பூட்டி விட்டு சென்னையில் வசிக்கும் அவரது மகள் பாரதி பிரியாவை பார்க்க சென்றார்.
அதன்பின்னர் 2 நாட்கள் கழித்து வாசுகி வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது. இதைக்கண்ட பக்கத்து வீட்டில் வசிக்கும் சேகர் என்பவர் செல்போன் மூலம் வாசுகிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து உடனடியாக வாசுகி சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு புறப்பட்டு வந்தார்.
நகை, மொபட் திருட்டு...வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அறைகளில் பொருட்கள், துணிகள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகை திருடு போயிருந்தது. மேலும் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மொபட்டும் காணாமல் போயிருந்தது. வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் நள்ளிரவு வீட்டின் கதவை உடைத்து நகை, மொபட்டை திருடி சென்றது வாசுகிக்கு தெரிய வந்தது.
இது தொடர்பாக திருவண்ணாமலை டவுன் குற்றப்பிரிவு போலீசில் வாசுகி நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, மொபட்டை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
பொதுமக்கள் அச்சம்திருவண்ணாமலையில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கடந்த 25–ந் தேதி திருவண்ணாமலை வேங்கிக்கால் நேதாஜி நகரில் வசிக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் மிதன் கார்த்திக் வீட்டை பூட்டி விட்டு கடலூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றபோது வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் 35 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் பணத்தை திருடி சென்றனர். அதேபோல் கடந்த மாதம் 26–ந் தேதி நேதாஜிநகர் 7–வது தெருவை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் நைனாக்கண்ணு வீட்டின் பூட்டை 3 மர்மநபர்கள் உடைத்து திருட முயன்றனர். இந்த நிலையில் தான் தலைமைஆசிரியை வாசுகியின் வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் 10 பவுன் நகை, மொபட்டை திருடி சென்றுள்ளனர்.
திருவண்ணாமலை நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெறும் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் இதுவரை பிடிபடவில்லை. எனவே போலீசார் நள்ளிரவுநேரங்களில் ரோந்துப்பணியை தீவிரப்படுத்துவதோடு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.