அரசு பள்ளிக்கூடத்தில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்காக இலவச பஸ் வசதி


அரசு பள்ளிக்கூடத்தில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்காக இலவச பஸ் வசதி
x
தினத்தந்தி 2 March 2017 1:30 AM IST (Updated: 1 March 2017 7:22 PM IST)
t-max-icont-min-icon

திசையன்விளை அருகே அரசு பள்ளிக்கூடத்தில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்காக முன்னாள் மாணவர்கள் இலவசமாக பஸ் வசதி செய்துள்ளனர்.

திசையன்விளை,

திசையன்விளை அருகே அரசு பள்ளிக்கூடத்தில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்காக முன்னாள் மாணவர்கள் இலவசமாக பஸ் வசதி செய்துள்ளனர்.

அரசு மேல்நிலைப்பள்ளி

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே குட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. 1960–ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தொடங்கப்பட்ட இந்த பள்ளிக்கூடம், 2008–ம் ஆண்டு முதல் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பள்ளிக்கூடம் ஆரம்ப காலத்தில் 500–க்கும் அதிகமான மாணவ–மாணவிகள் கல்வி பயின்று வந்தனர். காலப்போக்கில் கிராமங்களிலும் ஆங்கில மோகம் தொற்றிக் கொண்டதால் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கிலவழி கல்வி பள்ளிக்கூடத்தில் சேர்க்க தொடங்கினர். இதனால் இந்த பள்ளிக்கூடத்தில் ஆண்டுக்கு ஆண்டு மாணவ–மாணவிகளின் சேர்க்கை வெகுவாக குறைந்தது.

மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், ஊர் பொதுமக்கள் ஆகியோர் சேர்ந்து புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தனர். அதன்படி பள்ளிக்கூடத்தை சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று மாணவ–மாணவிகளின் பெற்றோர்களை சந்தித்தனர். தங்கள் ஊர் பள்ளிக்கூடத்தில் குழந்தைகளை சேர்க்குமாறு வலியுறுத்தினர்.

மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு

தரமான கல்வி கற்பிப்பதுடன் கிராமத்தில் இருந்து பள்ளிக்கூடத்துக்கு மாணவ–மாணவிகள் வந்து செல்ல தங்கள் சொந்த செலவில் காலை, மாலை நேரத்தில் இலவசமாக மினி பஸ் மற்றும் டிரக்கர் வசதி செய்து தருவதாகவும் அவர்கள் உறுதி அளித்தனர். இதற்கு சம்மதம் தெரிவித்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை குட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சேர்த்தனர். பழைய மாணவர்களின் இந்த முயற்சியால் வெம்மணங்குடி, குஞ்சன்விளை, கூடுதாழை, கடகுளம், தோப்புவிளை, செட்டிவிளை, புத்தன்தருவை ஆகிய கிராமங்களில் இருந்து 123 மாணவ–மாணவிகள் இலவச பஸ் மற்றும் டிரக்கர் மூலம் இப்பள்ளியில் சேர்ந்துள்ளனர். அதன் மூலம் இந்த பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை 260–ஆக உயர்ந்துள்ளது.


Next Story