மதுக்கடை போர்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம் 86 பா.ம.க.வினர் கைது


மதுக்கடை போர்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம் 86 பா.ம.க.வினர் கைது
x
தினத்தந்தி 2 March 2017 2:00 AM IST (Updated: 1 March 2017 8:07 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் மதுக்கடை போர்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம் நடத்திய பா.ம.க.வினர் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்,

வேலூரில் மதுக்கடை போர்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம் நடத்திய பா.ம.க.வினர் 30 பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் அரக்கோணம் மற்றும் ஜோலார்பேட்டை ஆகிய இடங்களில் நடந்த போராட்டங்களில் 56 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம்

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டு வருகிறது. ஆனால் சில இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் மூடப்படவில்லை. அவ்வாறு மூடப்படாமல் இருக்கும் கடைகளை அடையாளம் காட்டும் வகையில் அந்த மதுக்கடைகளுக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள போர்டுகளில் பா.ம.க.சார்பில் நேற்று ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம் நடந்தது.

வேலூர் மத்திய மாவட்ட பா.ம.க. சார்பில் ஆற்காடு ரோட்டில் காகிதப்பட்டறை மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பா.ம.க.வை சேர்ந்த மாநில துணைப்பொது செயலாளர் கே.எல்.இளவழகன், முன்னாள் மத்திய மந்திரி என்.டி.சண்முகம், மத்திய மாவட்ட செயலாளர் வெங்கடேசன், தலைவர் புருஷோத்தமன், நகர செயலாளர் சரவணன் உள்பட கட்சியினர் வந்தனர்.

30 பேர் கைது

அவர்கள் அந்த மதுக்கடைக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த போர்டில் ஸ்டிக்கரை ஒட்டினர். அந்த ஸ்டிக்கரில், இது அகற்றப்பட வேண்டிய சட்ட விரோதமான மதுக்கடை என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் வேலூர் வடக்கு போலீசார் இன்ஸ்பெக்டர் அறிவழகன் தலைமையில் அங்கு வந்தனர். அனுமதியின்றி இந்த போராட்டம் நடத்தியதாக பா.மக.வினர் 30 பேரை போலீசார் கைது செய்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

அரக்கோணம்

அரக்கோணத்தில் திருத்தணி சாலையில் உள்ள டாஸ்மாக் கடை முன்பாக ஸ்டிக்கர் ஒட்டிய பா.ம.க.வினர் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் டாக்டர் இ.பாலாஜி தலைமை தாங்கினார். நகர செயலாளர் ப.ஜெகநாதன், தலைமை நிலைய பேச்சாளர் தம்பிஏழுமலை, முன்னாள் மாவட்ட தலைவர் ஏ.பஞ்சாட்சரம் ஆகியோர் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஜி.உமாமகேஸ்வரி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக மாநில துணைப் பொதுச்செயலாளர் க.சரவணன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினர் 30 பேரை அரக்கோணம் டவுன் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை சந்தைகோடியூரில் உள்ள டாஸ்மாக் கடை முன் நடந்த போராட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் ஜி.பொன்னுசாமி தலைமை தாங்கினார். இதில் வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் கிருபாகரன், மாநில மகளிரணி தலைவர் நிர்மலாராஜா, மாவட்ட துணை செயலாளர் காசி, மாநில செயற்குழு உறுப்பினர் குட்டிமணி உள்பட பலர் கலந்து கொண்டு கோ‌ஷமிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினர் 26 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். 3 ஊர்களிலும் மொத்தம் 86 பேர் கைது செய்யப்பட்டனர்.


Next Story