அனைத்து கூட்டுறவு சங்கங்களும் கணினி மயமாக்கப்படும் அமைச்சர் செல்லூர்ராஜூ தகவல்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களும் கணினி மயமாக்கப்பட இருப்பதாக அமைச்சர் செல்லூர்ராஜூ தெரிவித்தார்.
வேலூர்,
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களும் கணினி மயமாக்கப்பட இருப்பதாக அமைச்சர் செல்லூர்ராஜூ தெரிவித்தார்.
அமைச்சர் ஆய்வுதமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்ராஜு நேற்று வேலூர் வந்தார். அவர் வேலூரில் செயல்பட்டு வரும் கற்பகம் கூட்டுறவு பண்டகசாலை மற்றும் கட்பாடியில் உள்ள பண்ணைபசுமை காய்கறி அங்காடி ஆகியவற்றை பர்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் அவருடைய தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் அமைச்சர் நிலோபர் கபில், கலெக்டர் எஸ்.ஏ.ராமன், எம்.எல்.ஏ.க்கள் என்.ஜி.பார்த்திபன், லோகநாதன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திருகுணஅய்யப்பதுரை, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் விஜயன், பொதுமேலாளர் காமாட்சி மற்றும் பலர் கலந்து கொண்டனர்
கூட்டம் முடிந்ததும் அமைச்சர் செல்லூர்ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:–
ரூ.5,368 கோடி கடன் தள்ளுபடிதமிழகத்தில் ரேஷன் அட்டைகளை ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. ஏப்ரல் மாதத்துக்குள் இந்த பணி முடிவடைந்துவிடும். 1.91 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் வறட்சி காலத்திலும் மக்கள் பசியாற முடிகிறது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் ரூ.5 ஆயிரத்து 368 கோடி கடன் தள்ளுடி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் 12 லட்சத்து 30 ஆயிரம் விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். யார் யாருக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது என்கிற தகவல் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. தொடக்க கூட்டுறவு வங்கிகள் மூலம் 2 லட்சத்து 44 ஆயிரம் பேருக்கு ரூ.1093 கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது.
பசுமை அங்காடிபசுமைபண்ணை காய்கறி அங்காடிகள் தற்போது மாவட்ட அளவில் செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் ஒருநாளைக்கு ரூ.1½ லட்சத்திற்கு காய்கறிகள் விற்பனையாகிறது. வேலூரில் ரூ.15 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. மாவட்ட அளவில் மட்டுமே உள்ள பசுமைபண்ணை காய்கறி அங்காடிகளை தாலுகா அளவில் ஏற்படுத்துவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் நடமாடும் காய்கறி அங்காடிகளை கொண்டுவருவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகிறது.
கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் கணினி மயமாக்கும் பணிகள் முழுமையடைந்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 6 ஆயிரத்து 420 கூட்டுறவு சங்கங்களும் கணினிமயமாக்கப்பட இருக்கிறது. மேலும் நடமாடும் கூட்டுறவு வங்கிகளை செயல்படுத்தும் திட்டமும் உள்ளது. இதற்காக ரூ.193 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2011–ம் ஆண்டு கூட்டுறவு வங்கிகளில் ரூ.26 ஆயிரம் கோடி வைப்பு நிதியாக இருந்தது. அது தற்போது ரூ.57 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அமைச்சர் செல்லூர்ராஜூ கூறினார்.