சசிகலா புஷ்பா எம்.பி. மீதான வழக்கை வாபஸ் பெறுகிறோம் புகார் அளித்த சகோதரிகள், போலீஸ் சூப்பிரண்டுக்கு மனு
அரசியல் லாபத்துக்காக சசிகலா புஷ்பா எம்.பி. மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பொய் புகார் கொடுக்க வைத்தனர்.
தூத்துக்குடி,
அரசியல் லாபத்துக்காக சசிகலா புஷ்பா எம்.பி. மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பொய் புகார் கொடுக்க வைத்தனர். எனவே அந்த வழக்கை வாபஸ் பெறுகிறோம் என்று சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் கொடுத்த சகோதரிகள், போலீஸ் சூப்பிரண்டுக்கு மனு அனுப்பி உள்ளனர்.
பாலியல் புகார்நெல்லை மாவட்டம் திசையன்விளையை அடுத்த ஆனைகுடியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவருடைய மனைவி பானுமதி. இவர் கடந்த 2011–ம் ஆண்டு சசிகலா புஷ்பாவின் சென்னை அண்ணா நகரில் உள்ள வீட்டில் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் சசிகலா புஷ்பா, தூத்துக்குடி மேயராக பொறுப்பேற்றதும் தூத்துக்குடியில் உள்ள வீட்டில் வேலை பார்த்து வந்தார்.
அப்போது சசிகலா புஷ்பா, அவருடைய கணவர் லிங்கேசுவர திலகன், மகன் பிரதீப் ராஜா ஆகியோர் அவ்வப்போது தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், தான் வீட்டை விட்டு தப்பி செல்ல முயன்றபோது சசிகலா புஷ்பாவின் தாய் கவுரி வீட்டில் அடைத்து வைத்து அடித்து கொடுமைப்படுத்தியதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீசிடம் பானுமதி புகார் மனு கொடுத்தார்.
சசிகலா புஷ்பா எம்.பி–குடும்பத்தினர் மீது வழக்குஇந்த புகாரின் பேரில் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் சசிகலா புஷ்பா எம்.பி, அவரது கணவர் லிங்கேசுவர திலகன், மகன் பிரதீப் ராஜா, தாய் கவுரி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் பானுமதி புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு ஒரு மனு அனுப்பி உள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:–
பொய் புகார் கொடுக்க வைத்தனர்அரசியல் லாபத்துக்காக சில தவறான நபர்கள் சேர்ந்து ஒரு பொய்யான புகாரை என்னை வைத்து கொடுக்க வைத்தனர். நான் கடந்த 8–8–2016 அன்று கொடுத்த புகாரில் உள்ள அனைத்தும் பொய்யானவை ஆகும். உண்மையில் நடக்காத ஒரு விஷயத்தை அசிங்கமாக வெளிப்படுத்தியதால் ஒரு பெண்ணான எனக்கு சமுதாயத்தில் நடமாடவே வேதனையாக இருக்கிறது. புகாரில் உள்ளது போன்று எந்த ஒரு சம்பவமும் நடைபெறவில்லை.
என்னுடைய மன அழுத்தத்தை தீர்ப்பதற்காக நான் தற்போது என்னுடைய புகாரை திரும்ப பெற்றுக்கொள்ள விரும்புகிறேன்.
எனவே நான் கடந்த 8–8–16 அன்று கொடுத்த புகாரையும், கடந்த 9–8–2016 அன்று பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையையும் வாபஸ் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த வழக்கை போலீஸ் இன்ஸ்பெக்டர் முடித்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறி உள்ளார்.
அதே மனுவில், பானுமதியின் சகோதரி ஜான்சிராணியும் இதேபோல தெரிவித்து உள்ளார்.
கோர்ட்டுதான் முடிவு செய்யும்இந்த மனு குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீசிடம் கேட்டபோது, சசிகலா புஷ்பா எம்.பி. மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான புகாரை வாபஸ் பெறுவதாக புகார்தாரர் பானுமதி பெயரில் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மனு அனுப்பப்பட்டு உள்ளது. இந்த மனுவில் உள்ள கையெழுத்து உண்மைதானா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். அதே நேரத்தில் இந்த வழக்கில் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் புகார்தாரர் வாக்குமூலம் கொடுத்து உள்ளார். இந்த வழக்கை முடித்து வைப்பது தொடர்பாக கோர்ட்டுதான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.