மதுபானக்கடையை அகற்றக்கோரி போராட்டம்: 18 பேர் கைது
மதுபானக்கடையை அகற்றக்கோரி போராட்டம்: பா.ம.க.வினர் 18 பேர் கைது
திண்டுக்கல்,
தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலையில் உள்ள மதுபான கடைகளை அகற்றக்கோரி, பா.ம.க. சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று பா.ம.க.வினர் ‘ஸ்டிக்கர்’ ஒட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி திண்டுக்கல் மாவட்ட பா.ம.க. சார்பில், திண்டுக்கல் ஆர்.எஸ். ரோட்டில் உள்ள ஒரு மதுபானக்கடை அருகே போராட்டம் நடந்தது. இதற்கு மாநில அமைப்பு செயலாளர் செல்வக்குமார் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், சட்டவிரோதமாக இயங்கும் மதுபான கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர். தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களும் எழுப்பினர்.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மதுபான கடை இருந்த பகுதியில் ‘ஸ்டிக்கர்’ ஒட்ட முயன்றனர். அவர்களை போலீஸ் துணை சூப்பிரண்டு சிகாமணி தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். பிறகு அனைவரையும் கைது செய்தனர். இதில், மாநில துணை பொதுச்செயலாளர் பரசுராமன், மாவட்ட செயலாளர்கள் சிவக்குமார், திருப்பதி, வன்னியர் சங்க மாநில துணை தலைவர் சபாபதி உள்பட 18 பேர் கைதானார்கள். அவர்கள் அனைவரையும் தனியார் விடுதியில் தங்க வைத்த போலீசார், மாலையில் விடுவித்தனர்.