குளத்தில் இருந்து கருகிய நிலையில் பெண் பிணம் மீட்பு போலீஸ் விசாரணை


குளத்தில் இருந்து கருகிய நிலையில் பெண் பிணம் மீட்பு போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 2 March 2017 3:45 AM IST (Updated: 2 March 2017 12:33 AM IST)
t-max-icont-min-icon

குஜிலியம்பாறை அருகே குளத்தில் இருந்து கருகிய நிலையில் பெண் பிணம் மீட்பு எரித்து கொல்லப்பட்டாரா? போலீஸ் விசாரணை

குஜிலியம்பாறை,

குஜிலியம்பாறை அருகே, குளத்தில் இருந்து கருகிய நிலையில் பெண்ணின் பிணத்தை போலீசார் மீட்டனர். மேலும் அந்த பெண் எரித்து கொல்லப்பட்டாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

வயிற்றுவலி

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள மல்லப்புரம் ஊராட்சி நெல்லம்பாறையை சேர்ந்தவர் மனோகரன் (வயது 40). இவருடைய மனைவி லட்சுமி (30). இவர்களுக்கு அதிரூபன், ஆனந்தரூபன் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மனோகரன் இறந்துவிட்டார். இதையடுத்து மாமியார் அமராவதியுடன் லட்சுமி தனது 2 மகன்களுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக லட்சுமிக்கு தீராத வயிற்றுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர், நேற்று முன்தினம் மாலையில் கடைத்தெருவுக்கு சென்றுவருவதாக மாமியாரிடம் கூறிவிட்டுசென்றார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

குளத்தில் பிணம்

இதனால் பதற்றமடைந்த அமராவதி, லட்சுமியின் தந்தையான கட்டையப்பனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் விரைந்து வந்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் தனது மகள் குறித்து விசாரித்துள்ளார். ஆனால் அவர் எங்கு சென்றார்? என்ற விவரம் தெரியவில்லை. இந்த நிலையில் நேற்று காலை நெல்லம்பாறை பெரியகுளத்துக்குள் கருகிய நிலையில் பெண் பிணம் கிடப்பதாக குஜிலியம்பாறை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முத்துக்குமாருக்கு தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இறந்தது அதே பகுதியை சேர்ந்த லட்சுமி என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து லட்சுமியின் தந்தை, உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்ற அவர்கள், கருகிய நிலையில் கிடந்த லட்சுமியின் பிணத்தை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொல்லப்பட்டாரா?

சம்பவம் குறித்து போலீசாரிடம் கேட்ட போது, வறட்சி காரணமாக குளத்தில் தண்ணீர் இல்லை. இதனால் அப்பகுதிக்கு அடிக்கடி யாரும் செல்வதில்லை. இந்த நிலையில் அந்த வழியாக விறகு சேகரிக்க சென்றவர்கள் கருகிய நிலையில் பெண் பிணம் கிடப்பதை பார்த்து எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நாங்கள் பார்த்த போது, பிணத்தின் அருகே மண்எண்ணெய் கேன், தீப்பெட்டி மற்றும் அந்த பெண் அணிந்திருந்த செருப்பு ஆகியவை கிடந்தது.

இதனால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என நினைத்தோம். ஆனால் அப்பகுதி மக்கள் அவர் எரித்துக்கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த பெண் எரித்துக் கொல்லப்பட்டாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம். இந்த நிலையில் லட்சுமியின் தந்தை தனது மகள் வயிற்றுவலியை தாங்க முடியாமல் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார் என்று தெரிவித்துள்ளார். அதன் பேரிலும் விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.


Next Story