முதுமலை புலிகள் காப்பகத்தில் கடும் வறட்சி
முதுமலை புலிகள் காப்பகத்தில் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளதால் வனத்துறையினர் அமைத்த தண்ணீர் தொட்டிகளில் வனவிலங்குகள் தாகம் தணித்து வருகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு போதுமான அளவு பருவமழை பெய்யவில்லை. இதனால் முதுமலை புலிகள் காப்பகம், சீகூர், சிங்காரா வனப்பகுதிகளில் உள்ள குளங்கள், ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு வருகின்றன. மேலும் வறட்சி காரணமாக வனப்பகுதியில் பசுந்தீவனம் தட்டுப்பாடும் நிலவுகிறது. எனவே உணவு மற்றும் தண்ணீரை தேடி வன விலங்குகள் இடம் பெயர்ந்து செல்ல தொடங்கி உள்ளன.
தற்காலிக தண்ணீர் தொட்டிஇந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள வன விலங்குகளின் தாகத்தை தீர்க்க டிராக்டர் மூலம் வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள குடிநீர் தொட்டிகளில் வனத்துறையினர் தண்ணீர் நிரப்பி வருகிறார்கள். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:– முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள பெரிய மற்றும் சிறிய அளவிலான தண்ணீர் தொட்டிகளில் நாள் ஒன்றுக்கு சுமார் 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ஊற்றப்பட்டு வருகிறது.
இதேபோல் சீகூர் வனப்பகுதியில் தேவையான இடங்களில் தற்காலிக தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு அதில் தண்ணீர் ஊற்றப்படுகிறது. சில பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள ஆழ்துளை கிணறுகள் மூலமாகவும் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்படுகின்றன. இதனால் வனவிலங்குகள் அந்த இடங்களுக்கு சென்று தேவையான தண்ணீரை குடித்து தாகத்தை தீர்த்துக்கொள்கின்றன. மேலும், தண்ணீர் வசதி இல்லாத இடங்களை கண்டறிந்து அந்த பகுதிகளிலும் தண்ணீர் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தாகம் தணிக்கும் வனவிலங்குகள்சீகூர் வனப்பகுதியில் உள்ள ஆனிக்கல் ஆறு முற்றிலுமாக தண்ணீர் இன்றி வறண்டு விட்டது. இதனால் வனத்துறையினர் அமைத்து உள்ள தண்ணீர் தொட்டிகளுக்கு வரும் காட்டு யானைகள் மற்றும் அதன் குட்டிகள் தண்ணீரை கண்டவுடன் பெரும் மகிழ்ச்சியுடன் ஆனந்தமாக குடித்து விளையாடி வருகின்றன. யானைகள் மட்டுமின்றி காட்டு எருமைகள், மான்கள், புலிகள், சிறுத்தைப்புலிகள் உள்பட அனைத்து வனவிலங்குகளும் தொட்டிகளில் ஊற்றப்படும் தண்ணீரை குடித்து தாகத்தை தணித்து வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.