கேரளாவில் இந்து அமைப்பினர் கொல்லப்படுவதை தடுக்க தவறிய முதல்–மந்திரி பினராயி விஜயனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்
கேரளாவில் இந்து அமைப்பினர் கொல்லப்படுவதை தடுக்க தவறிய அந்த மாநில முதல்–மந்திரி பினராயி விஜயனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஷோபா எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
சிக்கமகளூரு,
கேரளாவில் இந்து அமைப்பினர் கொல்லப்படுவதை தடுக்க தவறிய அந்த மாநில முதல்–மந்திரி பினராயி விஜயனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஷோபா எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
பா.ஜனதா ஆர்ப்பாட்டம்கேரளாவில் இந்து அமைப்பினர் கொல்லப்படுவதையும், தொடர்ந்து தாக்கப்படுவதையும் தடுக்க கோரியும், அதை தடுக்க தவறிய கேரள மாநில அரசையும், கேரள முதல்–மந்திரியை கண்டித்தும் சிக்கமகளூரு ஆஜாத் பூங்காவில் நேற்று பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிக்கமகளூரு–உடுப்பி தொகுதி எம்.பி. ஷோபா தலைமை தாங்கினார். இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, இந்து அமைப்பினர் கொல்லப்படுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரியும், கேரள அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் ஷோபா எம்.பி. தலைமையில் பா.ஜனதாவினர் சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கலெக்டர் சத்தியவதியிடம் கோரிக்கை மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.
முன்னதாக பா.ஜனதாவினர் சிக்கமகளூரு தாலுகா அலுவலகத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக ஆஜாத் பூங்காவுக்கு ஊர்வலமாக வந்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் ஷோபா எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
பதவி நீக்கம் செய்ய வேண்டும்கேரள முதல்–மந்திரி பினராயி விஜயன் ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து இதுவரை இந்து அமைப்புகளை சேர்ந்த 50–க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் கேரளாவில் தொடர்ந்து நடந்து வருகிறது. இதை தடுக்க கேரளா அரசு தவறிவிட்டது. இந்து அமைப்பினருக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு அம்மாநில அரசு உறுதுணையாக இருந்து வருகிறது. இது கண்டிக்கத்தக்கது.
கேரளாவில் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் கொல்லப்படுவதையும், தாக்கப்படுவதையும் தடுக்க தவறிய கேரள முதல்–மந்திரியை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்துக்களுக்கு பாதுகாப்பு அளிக்காத பினராயி விஜயன் மங்களூருவுக்கு வந்த போது கர்நாடக அரசு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து உரிய பாதுகாப்பு கொடுத்துள்ளது. அவரை இனி கர்நாடகத்திற்குள் நுழைய விட மாட்டோம். அதை மீறி அவர் வந்தால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.
பா.ஜனதாவில் இணைய தயாராகிவிட்டனர்சிக்கமகளூருவில் பிரசித்தி பெற்ற முல்லையன்கிரி மலைப் பகுதியில் ரோப்கார் சேவையை செயல்படுத்த கடந்த ஆண்டு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தேன். ஆனால் அந்த சேவையை செயல்படுத்த இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மீண்டும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளேன். விரைவில் முல்லையன்கிரி மலைப்பகுதியில் ரோப்கார் சேவை தொடங்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் கட்சிக்குள் உள்கட்சி மோதல் ஏற்பட்டு வருகிறது.
முதல்–மந்திரி சித்தராமையா சர்வாதிகாரி போல் செயல்படுவதால் காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள் வெளியேறி பா.ஜனதாவில் இணைய தயாராகிவிட்டனர். விரைவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குமார் பங்காரப்பா உள்பட 10–க்கும் மேற்பட்டோர் பா.ஜனதாவில் இணைய உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.