திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சம் விசைத்தறிகள் உற்பத்தி நிறுத்தம்


திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சம் விசைத்தறிகள் உற்பத்தி நிறுத்தம்
x
தினத்தந்தி 2 March 2017 4:30 AM IST (Updated: 2 March 2017 1:04 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் 2 லட்சம் விசைத்தறிகள் உற்பத்தியை நிறுத்தியுள்ளதால், 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்தில் விவசாயத்துக்கு அடுத்த படியாக பிரதான தொழிலாக விசைத்தறி தொழில் விளங்கி வருகிறது. இந்த இரு மாவட்டங்களில் மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமான விசைத்தறிகள் இயங்குகின்றன. இந்த தொழிலில் 5 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.

கடந்த இரு ஆண்டுகளாக, பஞ்சு விலை நிலையாக இல்லாததால், விசைத்தறியில் உற்பத்தியாகும் காடா துணிக்கு, கட்டுப்படியாகும் விலை கிடைப்பதில்லை. இதன்காரணமாக ஜவுளி துணி உற்பத்தி பாதிப்பு, பல கோடி ரூபாய் நஷ்டம், தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு பாதிப்பு போன்றவை ஏற்பட்டுள்ளது.

உற்பத்தி நிறுத்தம்

விசைத்தறி தொழிலில் சுமூகமான இயக்கம் இல்லாததால், மார்ச் மாதம் 1–ந்தேதி (நேற்று) முதல் காலவரையற்ற உற்பத்தி நிறுத்தம் செய்ய ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம், சொந்த விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் சங்கம், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்கள் ஆகியவை இணைந்து கூட்டாக முடிவு செய்து இருந்தனர்.

அதன்படி நேற்று காலை முதல் திருப்பூர், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து விசைத்தறிகளும் அடைக்கப்பட்டு, உற்பத்தி நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளன. இதன்காரணமாக தினமும் ரூ.36 கோடி மதிப்பிலான 90 லட்சம் மீட்டர் துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

இதுகுறித்து விசைத்தறி உரிமையாளர்கள் சங்க திருப்பூர் மாவட்டத்தலைவர் வேலுச்சாமி கூறியதாவது:–

துணி உற்பத்தி பாதிப்பு

இந்த போராட்டம் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 1½ லட்சம் விசைத்தறிகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதன் மூலம் தினமும் ரூ.24 கோடி மதிப்பிலான 60 லட்சம் மீட்டர் துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நேர்முகமாகவும், முறைமுகமாகவும் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

இதேபோல் கோவை மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரம் விசைத்தறிகள் நிறுத்தப்பட்டுள்ளதன் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.12 கோடி மதிப்பிலான 30 லட்சம் மீட்டர் துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story