மாணவர்கள் மோதல் எதிரொலி பெற்றோர்–ஆசிரியர் கழக உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்


மாணவர்கள் மோதல் எதிரொலி பெற்றோர்–ஆசிரியர் கழக உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 2 March 2017 3:00 AM IST (Updated: 2 March 2017 1:29 AM IST)
t-max-icont-min-icon

மாணவர்கள் மோதல் எதிரொலி பெற்றோர்–ஆசிரியர் கழக உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் டி.ஐ.ஜி.அனிஷா உசேன் தலைமையில் நடைபெற்றது

கடலூர் மஞ்சக்குப்பம் மைதானம் நகராட்சி பூங்கா அருகில் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் பிளஸ்–2 மற்றும் பிளஸ்–1 மாணவர்களுக்கு இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதில் பிளஸ்–2 மாணவர் படுகாயம் அடைந்ததார். இதற்கு பழி வாங்கும் நோக்கத்தில் பீச்ரோட்டில் நடந்து சென்ற பிளஸ்–1 மாணவரின் ஆதரவாளரான உத்திரமூர்த்தி என்பவரை பிளஸ்–2 மாணவர்களின் ஆதரவாளர்கள் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார்.

இது தொடர்பாக இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிளஸ்–1 மாணவரை கைது செய்தனர். மேலும் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பிளஸ்–2 பொதுத் தேர்வு நாளை தொடங்க உள்ள நிலையில் மாணவர்களுக்கிடையே நடந்துள்ள இந்த மோதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆலோசனை கூட்டம்

இந்த நிலையில் பள்ளி மாணவ–மாணவிகள் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் காவல்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி.அனிஷா உசேன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி, மாவட்ட கல்வி அதிகாரிகள் குமாரசாமி, கோமதி, மதிவாணன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் நரசிம்மன், ஷாகுல் அமீது, கணேசன், வெங்கடேசன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள்.


Next Story