கல்லறை தோட்டம் ஆக்கிரமிப்பு; கிராமமக்கள் மறியலுக்கு முயற்சி
மானாமதுரை அருகே கல்லறை தோட்டத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி கிராமமக்கள் மதுரை–ராமேசுவரம் நான்கு வழிச்சாலையில் மறியலுக்கு முயன்றனர்.
இந்தநிலையில் நேற்று சாம்பல் புதன் என்பதால் கல்லறையில் வழிபாடு செய்வதற்காக மக்கள் வந்தனர். அப்போது கல்லறை தோட்டத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. இதனை கண்டித்து கேப்பர்பட்டினம் கிராமமக்கள் மதுரை–ராமேசுவரம் சாலையில் மறியல் செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மானாமதுரை போலீசார் மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அலைக்கழிப்புஇதுகுறித்து கிராம தலைவர் ஜெயசீலன் கூறுகையில், வாழ்வாதாரத்தை இழந்து 85 குடும்பங்கள் தவிக்கிறது. தண்ணீர்தொட்டி, கல்லறை தோட்டம் உள்ளிட்ட அனைத்தையும் இடித்து அகற்றி விட்டனர். மாற்று இடம் தருவதாக கூறி தாசில்தார் அவர்களை அலைக்கழிக்கிறார், அலுவலகத்திற்கு சென்றால் ஏதாவது காரணத்தை கூறி பதில் சொல்ல மறுக்கின்றனர். எனவே மாற்று இடம் உடனடியாக வழங்க வேண்டும் என்றார்.
கேப்பர்பட்டினத்தை சேர்ந்த செல்வி என்பவர் கூறுகையில், தண்ணீர் தொட்டி இடிக்கப்பட்டதால் 15 நாட்களாக குடிக்கக்கூட தண்ணீரின்றி பரிதவித்து வருகிறோம். கல்லறை தோட்டத்தை தனிநபர் ஆக்கிரமித்ததுடன் தட்டி கேட்கும் கிராமமக்களுக்கு மிரட்டல் விடுக்கிறார். அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆகியவற்றை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும். மேலும் சாலை மறியல் போராட்டமும் நடத்தப்படும் என்றார்.