போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்படும் வழக்குகளை ஆன்லைனில் தெரிந்து கொள்ளும் வசதி


போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்படும் வழக்குகளை ஆன்லைனில் தெரிந்து கொள்ளும் வசதி
x
தினத்தந்தி 2 March 2017 4:00 AM IST (Updated: 2 March 2017 2:11 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்படும் வழக்குகளை ஆன்லைனில் தெரிந்து கொள்ளும் வசதி போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தொடங்கி வைத்தார்

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்படும் வழக்குகளை பொதுமக்கள் ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம். இந்த வசதியை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

ஆன்லைன் வசதி

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்படும் வழக்குகள் விவரத்தை பொதுமக்கள் ஆன்லைனில் தெரிந்து கொள்ளும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த வசதியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், சிவகங்கையில் தொடங்கிவைத்தார். விழாவில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தணிக்கைவேல், துணை போலீஸ் சூப்பிரண்டு மங்களேசுவரன், இன்ஸ்பெக்டர்கள் பாரதிபிரியா, மோகன், சப்–இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன், உமாசங்கர், பூபதிராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கணினியில் பதிவேற்றம்

பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:–

சிவகங்கை மாவட்டத்தில் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்க வலைபின்னல் முறை மூலம் அனைத்து போலீஸ் நிலையங்களும் கணினிமயம் ஆக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் 1980 முதல் 2010–ம் ஆண்டு வரை பதிவு செய்யப்பட்ட முக்கிய வழக்குகளும், இத்தடன் 2011 முதல் இன்று வரை பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் கணினியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை சிவகங்கை மாவட்டத்தில் 90 ஆயிரத்து 797 வழக்குகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

எனவே இனிமேல் பொதுமக்கள் www.eservices.tnpolice.gov.in என்ற இணையதளம் மூலம் போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பிய தங்களின் ஆன்லைன் புகார்கள், மனுரசீது பதிவு செய்யப்பட்ட விவரம் மற்றும் வழக்குப்பதிவு செய்யப்பட்ட விவரங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் கடந்த ஆண்டு ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின்பேரில் போலீஸ் நிலையத்தில் தினசரி பதிவு செய்யப்படும் வழக்குகள் கணினியில் பதிவு செய்யப்பட்டு கோர்ட்டிற்கு அனுப்பப்பட்டு வருகிறது.

வாகன விபத்து வழக்குகள்

இதுதவிர போலீஸ் தகவல் தொடர்பு பயன்பாட்டிற்காக மின்னஞ்சல் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. வழக்குகள் சம்பந்தமான இறுதி அறிக்கையும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு கோர்ட்டிற்கு அனுப்பட்டு வருகிறது. மேலும் கடந்த 26–1–2017 முதல் போலீஸ் நிலையங்களில் புகார் தரும் மனுதாரரின் செல்போன் எண்ணிற்கு மனு விசாரணையின் முடிவு குறித்த விவரம் குறுந்தகவலாக அனுப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக முதல் தகவல் அறிக்கையிலும் மனுதாரரின் செல்போன் எண் பதிவு செய்யப்படுகிறது. இதன்மூலம் இறுதி அறிக்கை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது உள்ளிட்ட தகவல்களும் அனுப்பப்படுகிறது.

மேலும் இந்த மாதம் முதல் வாகன விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வாகன விபத்து தொடர்பான அனைத்து விவரங்களையும் கணினியில் பதிவேற்றம் செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் வருகிற ஏப்ரல் மாதம் முதல் வாகன விபத்து வழக்குகள், ஆவணங்கள் ஆன்லைன் மூலம் காப்பீட்டு அலுவலகம் மற்றும் கோர்ட்டிற்கு கு அனுப்பப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story