வங்கி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை


வங்கி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 2 March 2017 3:00 AM IST (Updated: 2 March 2017 2:11 AM IST)
t-max-icont-min-icon

பால் உற்பத்தியாளர்களின் வங்கி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம்

கால்நடை தீவனங்களை 50 சதவீத மானிய விலையில் வழங்கிட வேண்டும், பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய பாக்கியினை உடனடியாக வழங்க வேண்டும், பள்ளியில் சத்துணவு திட்டத்தில் பாலையும் சேர்த்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் வலியுறுத்தி வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் காமராஜர் சிலை அருகில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் மணிக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் அண்ணாத்துரை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் குருசாமி, செயலாளர் விஜயமுருகன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். போராட்டத்தை நிறைவு செய்து சங்கத்தின் மாநில பொருளாளர் சங்கர் பேசினார்.

கடன் தள்ளுபடி

இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது;–

பசும்பால் மற்றும் எருமைப்பால் விலை தற்போது உள்ள விலைவாசி உயர்விற்கேற்ப உயர்த்தப்படவில்லை. அரசு உடனடியாக தலையிட்டு பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.35–ம், எருமைப்பாலுக்கு லிட்டருக்கு ரூ.45–ம் கொள்முதல் விலையாக பால் உற்பத்தியாளர்களுக்கு உயர்த்தி வழங்க வேண்டும். வறட்சி காரணமாக தற்போது விவசாயிகளும், பால் உற்பத்தியாளர்களும் வாழ்வாதாரத்தில் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளனர். வங்கிகளில் அவர்கள் வாங்கியுள்ள கடன் முழுவதையும் தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.

ஆவின்பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனையை அதிகப்படுத்திட அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழக அரசும், விருதுநகர் மாவட்ட ஆவின் நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் ஆவின் பொருட்களின் விற்பனையை அதிகப்படுத்துவதில் மெத்தனமாக இல்லாமல் தீவிரமாக செயல்பட வேண்டும். உள்ளூரிலேயே பால் பவுடர், மற்றும் பால் பொருட்கள் அதிகமாக கிடைக்கும்போது வெளியிலிருந்து இறக்குமதி செய்யவேண்டிய நிலைமை உள்ளது. இதை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story