குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 2 March 2017 4:30 AM IST (Updated: 2 March 2017 2:22 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி கோரிமேடு பகுதியில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி,

இந்த ஆண்டு பருவமழை போதிய அளவு பெய்யாததாலும், கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விடாததாலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. திருச்சி மாநகரத்தில் நேற்று முன்தினம் முதலியார்சத்திரம் பகுதியை சேர்ந்த பெண்கள் சீராக குடிநீர் வழங்க கோரி காலி குடங் களுடன் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை திருச்சி கோரிமேடு பகுதியை சேர்ந்த பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் மெயின்ரோட்டுக்கு திரண்டு வந்தனர். அவர்கள் திடீரென்று சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

லாரி மூலம் குடிநீர்

அப்போது கடந்த சில நாட்களாகவே தங்கள் பகுதிக்கு குடிநீர் சரியாக வரவில்லை என்றும், அவ்வப்போது தண்ணீர் வந்தாலும் சிறிதுநேரம் மட்டுமே வந்துவிட்டு நின்று விடுவதாகவும், இதனால் குடிநீர் இன்றி அவதிப்படுகிறோம் என்றும் பெண்கள் கூறினார்கள். மாநகராட்சி அதிகாரிகள் அவர்களிடம், கம்பரசம்பேட்டை அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் குடிநீர் வழங்குவதில் தற்காலிக சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் உடைப்பு சரி செய்யப்பட்டு சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

பின்னர் உடனடியாக அந்த பகுதிக்கு லாரி மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. இதை யடுத்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில் திருச்சியின் பல பகுதிகளில் ஆங்காங்கே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. மாநகராட்சி அதிகாரிகள் சிறப்பு கவனம் எடுத்து மக்களுக்கு சீராக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.


Next Story