வேளாங்கண்ணி பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி


வேளாங்கண்ணி பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி
x
தினத்தந்தி 2 March 2017 4:00 AM IST (Updated: 2 March 2017 2:22 AM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணி பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

நாகப்பட்டினம்,

ஏசு கிறிஸ்து, தான் சிலுவையில் அறையப்படும் நாள் நெருங்குவதை அறிந்து உலக மக்களின் பாவங்களை போக்க உபவாசம் இருந்து ஜெபித்தார். இந்த காலத்தை நினைவு கூரும் வகையில் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 40 நாள் உபவாசம் இருப்பது வழக்கம். இந்த 40 நாட்களை கிறிஸ்தவர்கள் தவக்காலம் என்றும், புனித நாட்கள் என்றும் கூறி உபவாசிக்கன்றனர். இந்த நாட்களில் பக்தர்களின் நல்ல எண்ணம், ஏற்கனவே செய்த தவறுகளிலிருந்து மனம் திருந்தி நல்வழியில் ஈடுபடவும், தொடர்ந்து ஜபத்தில் ஈடுபடவும், அதற்காக தவக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தவக்காலம் நேற்று தொடங்கியது. இந்த புனிதநாள் சாம்பல் புதன் என்று அழைக்கப்படுகிறது. சாம்பல் புதனையொட்டி நேற்று நாகை பகுதியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நடைபெற்றது.

சிறப்பு திருப்பலி

இதன் ஒரு பகுதியாக வேளாங்கண்ணி பேராலயத்தில் நேற்று பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பலியின்போது சாம்பலை கிறிஸ்தவர்களின் நெற்றியில் சிலுவை அடையாளமாக பங்கு தந்தைகள் பூசி ஆசி வழங்கினர். இதைதொடர்ந்து கோவிலில் திவ்ய நற்கருணை திருப்பலி நடைபெற்றது. இதில் பங்கு தந்தை சூசைமாணிக்கம், பொருளாளர் யாகப்பராஜரத்தினம், உதவி பங்கு தந்தை ஜோதிநல்லப்பன், அருள் சகோதரிகள் மற்றும் அருள் சகோதரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு ஆசி பெற்றனர். இதைதொடர்ந்து, தவக் காலங்களில் வேளாங் கண்ணி பேராலயத்தில் தினமும் மாலை 5.45 மணிக்கு சிலுவைப்பாதையில் மன்றாட்டு ஜெபம் நடைபெறும். இதேபோல் காடம்பாடி தூயஅந்தேரியா ஆலயம், சவேரியார் ஆலயம், நாகை முதலாவது கடற்கரை சாலையில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடை பெற்றது. 

Next Story