சமயபுரம் மாரியம்மன் கோவில் மண்டலாபிஷேகம் இன்றுடன் நிறைவு


சமயபுரம் மாரியம்மன் கோவில் மண்டலாபிஷேகம் இன்றுடன் நிறைவு
x
தினத்தந்தி 2 March 2017 4:00 AM IST (Updated: 2 March 2017 2:24 AM IST)
t-max-icont-min-icon

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் மண்டலாபிஷேகம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

சமயபுரம்,


சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவிலாகும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்ற ஆகம விதிப்படி, இந்த கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 6-ந் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மறுநாள் முதல் மண்டலாபிஷேகம் தொடங்கி நடைபெற்று வந்தது. பொதுவாக மண்டலாபிஷேகம் என்பது 48 நாட்கள் நடைபெறுவதாகும்.ஆனால் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா விரைவில் நடைபெறுவதையொட்டி 48 நாட்கள் என்பதை 24 நாட்களாக குறைக்கப்பட்டு காலையும், மாலையும் என இரு வேளைகள் மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதன்படி 48 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற்றதாகவே பொருள்படும்.

இன்றுடன் நிறைவு

அதன்படி மண்டலாபிஷேகம் 24-வது நாளான இன்றுடன்(வியாழக்கிழமை) நிறைவு பெறுகிறது. நேற்று மாலை சப்தசதி பாராயணம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து உற்சவ அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டார்கள்.மண்டலாபிஷேகம் நிறைவு பெறுவதை குறிக்கும் வகையில் இன்று காலையில் இருந்து மதியம் வரை சண்டி ஹோமம் நடைபெறுகிறது. பொதுவாக மண்டலாபிஷேகம் நடைபெறும் காலங்களில் அம்மன் தனது எல்லைக்கு வெளியே செல்லக்கூடாது என்ற ஐதீகத்தின் படி ஸ்ரீரங்கம் ரெங்கநாதரிடம் தங்கையான மாரியம்மன் சீர்பெறும் நிகழ்ச்சிக்கு அம்மன் கொள்ளிட கரைக்கு செல்லவில்லை. இதனால் ரெங்கநாதரே சமயபுரம் வந்து தங்கையான மாரியம்மனுக்கு சீர் கொடுத்துவிட்டு சென்ற நிகழ்ச்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story