போலீஸ்காரரை அடித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை மும்பை செசன்சு கோர்ட்டு தீர்ப்பு


போலீஸ்காரரை அடித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை மும்பை செசன்சு கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 2 March 2017 3:22 AM IST (Updated: 2 March 2017 3:21 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ்காரரை அடித்து கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மும்பை செசன்சு கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

மும்பை,

போலீஸ்காரரை அடித்து கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மும்பை செசன்சு கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

குடியிருப்பில் ரகளை

மும்பை, வாடி பந்தர் பி.டி. மெல்லா ரோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 2014–ம் ஆண்டு நவம்பர் மாதம் 15–ந்தேதி நள்ளிரவு சந்தோஷ் சால்வே(வயது35) என்பவர் அத்துமீறி நுழைந்தார். பின்னர் அவர் குடியிருப்பிற்குள் ரகளையில் ஈடுபட்டார். இதுகுறித்து குடியிருப்புவாசிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்தநிலையில் சந்தோஷ் சால்வே குடியிருப்பின் மொட்டை மாடிக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டார்.

டோங்கிரி போலீஸ்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் சந்தோஷ் சால்வேயிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அவர் மாடியில் இருந்து இறங்கி வர மறுத்துவிட்டார்.

போலீஸ்காரர் கொலை

இதையடுத்து சந்தோஷ் சால்வேயை பிடிக்க போலீஸ்காரர் அருண் காவந்த் உள்ளிட்ட சிலர் ஜன்னல் வழியாக மொட்டை மாடிக்கு ஏறினர். இதில், அருண் காவந்த் முதலில் மொட்டை மாடியை அடைந்தார். பின்னர் அவர் சந்தோஷ் சால்வேயை சரணடையுமாறு கூறினார். அப்போது ஆத்திரமடைந்த அவர், போலீஸ்காரரை அங்கு கிடந்த மரப்பலகையால் சரமாரியாக தாக்கினார். இதில் போலீஸ்காரரின் மண்டை உடைந்தது. இந்தநிலையில் மொட்டை மாடிக்கு சென்ற போலீசார் சந்தோஷ் சால்வேயை கைது செய்தனர்.

மேலும் ரத்த வெள்ளத்தில் கிடந்த போலீஸ்காரர் அருண் காவந்தை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அருண் காவந்த் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர்.

ஆயுள் தண்டனை

போலீஸ்காரர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்தநிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணையின் முடிவில் சந்தோஷ் சால்வே மீதான குற்றச்சாட்டு தகுந்த ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் சந்தோஷ் சால்வேக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டனர். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சந்தோஷ் சால்வே சோலாப்பூரை சேர்ந்தவர் ஆவார்.


Next Story