மின்மோட்டார் மூலம் குடிநீர் திருடினால் கடும் நடவடிக்கை நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை
மின்மோட்டார் மூலம் குடிநீர் திருடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விருதுநகர் நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
விருதுநகர்,
குடிநீருக்கு தட்டுப்பாடுவிருதுநகர் நகராட்சி பகுதியில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாமல் ஆணைக்குட்டம் அணையின் மூலமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த ஆண்டு போதிய மழை பெய்யாத காரணத்தினால் ஆனைக்குட்டம் அணையில் தண்ணீர் முழுமையாக வற்றி விட்டது.
விருதுநகர் நகராட்சிக்கு குடிநீர் வழங்கும் நீர் நிலைகளுக்கு போதிய நீர் வரத்து இல்லாத காரணத்தினால் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கடும் நடவடிக்கைஇருந்தபோதிலும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க பல்வேறு நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே நகராட்சி நிர்வாகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:–
நகராட்சி நிர்வாகம் வழங்கும் குடிநீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார் பொருத்தி குடிநீரை உறிஞ்சி எடுப்பது சட்டப்படி குற்றமாகும். ஆய்வின் போது குடிநீர் இணைப்பில் மின் மோட்டார் பொருத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் மின் மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன் அபராதம் வசூலிக்கப்படும்.
எனவே, விருதுநகர் நகர பொது மக்கள் கோடை காலத்தில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.