மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வு தொடங்கியது 21,948 மாணவ–மாணவிகள் எழுதினர்


மாவட்டத்தில்  பிளஸ்–2 தேர்வு தொடங்கியது 21,948 மாணவ–மாணவிகள் எழுதினர்
x
தினத்தந்தி 3 March 2017 4:30 AM IST (Updated: 2 March 2017 7:09 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வு தொடங்கியது.

தர்மபுரி,

பிளஸ்–2 தேர்வு

தமிழகம் முழுவதும் பிளஸ்–2 அரசு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. நேற்று மொழிப்பாடம் முதல் தாள் தேர்வு நடைபெற்றது. தர்மபுரி மாவட்டத்தில் இந்த தேர்வை 92 அரசு பள்ளிகள், 43 மெட்ரிக் பள்ளிகள் மற்றும் சுயநிதி பள்ளிகள், ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் என 148 பள்ளிகளை சேர்ந்த 11,287 மாணவர்கள், 10,661 மாணவிகள் என மொத்தம் 21,948 பேர் எழுதினார்கள்.

இதேபோல் தனித்தேர்வர்களாக தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களும் இந்த தேர்வை எழுதினார்கள்.

பிளஸ்–2 தேர்வுக்காக மாவட்டம் முழுவதும் 57 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 57 முதன்மை கண்காணிப்பாளர்கள் உள்பட தேர்வு பணியில் மொத்தம் 1531 பேர் ஈடுபட்டனர். இந்த தேர்வுக்காக அமைக்கப்பட்ட 10 வினாத்தாள் காப்புகட்டு மையங்களில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் வழித்தட அலுவலர்கள் மூலம் வினாத்தாள் கட்டுகள் அனைத்து தேர்வு மையங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டன. தேர்வில் முறைகேடுகளை தடுக்க 228 ஆசிரியர்கள் அடங்கிய பறக்கும் படையினர் மற்றும் மாவட்ட அலுவலர்கள் தலைமையிலான 6 பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கலெக்டர் ஆய்வு

தர்மபுரி இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தை கலெக்டர் விவேகானந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தேர்வு எழுதும் மாணவ–மாணவிகளுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள், தேர்வு எண் ஆகியவற்றை அவர் சரிபார்த்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

தர்மபுரி மாவட்டத்தில் நடைபெறும் பிளஸ்–2 தேர்வு கண்காணிப்பு அதிகாரியாக தொடக்கக்கல்வி இணை இயக்குனர் சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களை ஆய்வு செய்தார். பிளஸ்–2 தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் வசதிக்காக சொல்வதை எழுத 16 பேர் நியமனம் செய்யப்பட்டு பணியில் ஈடுபட்டனர். தேர்வு மையங்களில் மாணவ–மாணவிகளுக்கு குடிநீர், கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவசர தேவைக்காக மருத்துவக்குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.


Next Story