நெய்வேலி அருகே முன்னாள் கவுன்சிலர் வீட்டில் நகை–பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


நெய்வேலி அருகே முன்னாள் கவுன்சிலர் வீட்டில் நகை–பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 3 March 2017 4:15 AM IST (Updated: 2 March 2017 7:35 PM IST)
t-max-icont-min-icon

நெய்வேலி அருகே முன்னாள் கவுன்சிலர் வீட்டில் நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நெய்வேலி,

முன்னாள் கவுன்சிலர்

நெய்வேலி அருகே உள்ள சிறுதொண்டமாதேவியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 43). முன்னாள் ஒன்றிய கவுன்சிலரான இவர், கடலூர் மாவட்ட பா.ம.க. அமைப்பாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி எழிலரசி(39). இவர்கள் தற்போது என்.எல்.சி. ஆர்ச் கேட் அருகே உள்ள டி.டி.ஆர். நகரில் வசித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு ரவிச்சந்திரன் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். பின்னர் அவர் நேற்று காலை எழுந்து பார்த்த போது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே வீட்டின் மற்றொரு அறைக்கு சென்று பார்த்த போது அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ.8 ஆயிரம் மற்றும் 4 பவுன் நகை காணாமல் போனது தெரியவந்தது.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்த தகவலின் பேரில் நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் ரவீந்திரராஜ் மற்றும் தெர்மல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், நள்ளிரவு நேரத்தில் ரவிச்சந்திரன் வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த ரூ.8 ஆயிரம் மற்றும் 4 பவுன் நகையை திருடிச் சென்றது தெரிந்தது. திருடு போன நகையின் மதிப்பு ரூ.80 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு திருட்டு சம்பவம் நடந்த வீட்டில் பதிவாகியிருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை சேகரித்து சென்றனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் தெர்மல் போலீசார் நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story