ஆயிரம் ரூபாய்க்காக நடந்த கொலை: ‘கடனை திருப்பி கேட்டு தாயை திட்டியதால் தீர்த்துக்கட்டினேன்’ கைதான வாலிபர் வாக்குமூலம்
‘ஆயிரம் ரூபாய் கடனை திருப்பிக்கேட்டு தாயை அவதூறாக திட்டியதால் கொலை செய்தேன்’
போத்தனூர்,
வாலிபர் கைதுகோவையை அடுத்த போத்தனூர் மகாலிங்காபுரம் முல்லை நகரை சேர்ந்தவர் மனோஜ் (வயது 25). டிரைவர். இவருடைய நண்பர் சித்தேஸ்வரன் (33). சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த ராமையனூரை சேர்ந்த இவர் கோவையில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்தார். திருமணமாகாதவர். இந்த நிலையில் கடந்த 28–ந் தேதி இரவு மனோஜின் வீட்டில் சித்தேஸ்வரன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் மனோஜை கைது செய்தனர். கட்டிட தொழிலாளி சித்தேஸ்வரனை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து போலீசாரிடம் மனோஜ் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறிஇருப்பதாவது:–
குடிப்பழக்கம்என் தந்தை கிருஷ்ணன் மதுரையில் உள்ள கப்பல் நிறுவனத்தில் பணியாற்றினார். அப்போது முதல் எனக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. நான் பகுதி நேர டிரைவராக வேலைபார்த்து வந்தேன். எனக்கு குடிப்பழக்கம் இருந்ததால் யாரும் டிரைவர் வேலைக்கு அழைப்பதில்லை. இந்த நிலையில்தான் தந்தை வேலையில் இருந்து ஓய்வு பெற்றதால் நாங்கள் கோவைக்கு குடிபெயர்ந்தோம். இங்கு வந்தும் நான் வேலைக்கு செல்லாமல் பெரும்பாலும் வீட்டில்தான் இருந்தேன்.
இதற்கிடையில் என் வீட்டுக்கு அருகில் வசிக்கும் சித்தேஸ்வரனும் நானும் நண்பர்களாக பழகி வந்தோம். நான் அவரிடம் சில மாதங்களுக்கு முன்பு ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினேன். ஆனால் அதை நான் திருப்பி தரவில்லை. அடிக்கடி பணத்தை கேட்டு சித்தேஸ்வரன் தொந்தரவு செய்து வந்தார். சில சமயங்களில் பலர் இருக்கும் போதும் ஆயிரம் ரூபாய் கடனை கேட்டு அவதூறாகவும் பேசுவார். இதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனக்கு வருமானம் இல்லாததால் அந்த பணத்தை என்னால் திருப்பி கொடுக்க முடியவில்லை.
தாயாரை அவதூறாக திட்டினார்கடந்த 28–ந் தேதி இரவு இரண்டு பேரும் என் வீட்டு மாடியில் மது குடித்தோம். அப்போதும் சித்தேஸ்வரன் நான் வாங்கிய ஆயிரம் ரூபாய் கடனை திருப்பிக் கேட்டார். நான் தருகிறேன் என்று சொன்னேன். ஆனால் அதற்கு அவர் என் தாய் பற்றி அவதூறாக திட்டினார். இதனால் நான் ஆத்திரம் அடைந்தேன். இரண்டு பேரும் மது குடித்த பின்னர் அங்கேயே தூங்கி விட்டோம். இரவில் திடீரென்று கண் விழித்து பார்த்தபோது சித்தேஸ்வரன் நன்றாக தூங்கிக் கொண்டிருந்ததை பார்த்தேன். ஆயிரம் ரூபாய் கடனுக்காக என் தாய் பற்றி சித்தேஸ்வரன் அவதூறாக பேசியது எனக்கு ஞாபகத்துக்கு வந்தது. உடனே நான் அவரை கொலை செய்ய முடிவு செய்து அருகில் இருந்த குழவிக்கல்லை எடுத்து சித்தேஸ்வரன் தலையில் போட்டேன். இதில் அவர் தலை நசுங்கி அந்த இடத்திலேயே பலியானார். உடனே நான் அங்கிருந்து தப்பி சென்றேன். ஆனால் என்னை போலீசார் கைது செய்து விட்டனர்’
இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் மனோஜ் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள மனோஜுக்கு சிறு வயது முதலே குடிப்பழக்கம் இருந்துள்ளது. அவரை அந்த பழக்கத்தில் இருந்து விடுவிக்க அவருடைய பெற்றோர் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை என்று போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.