ஆம்பூர் நாயக்கனேரி மலையில் ரூ.90 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி


ஆம்பூர் நாயக்கனேரி மலையில் ரூ.90 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி
x
தினத்தந்தி 3 March 2017 2:00 AM IST (Updated: 2 March 2017 7:44 PM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் நாயக்கனேரி மலையில் ரூ.90 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

ஆம்பூர்,

ஆம்பூர் நாயக்கனேரி மலையில் ரூ.90 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. 40 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாயக்கனேரி மலை

ஆம்பூரில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் மலைப்பகுதியில் அமைந்துள்ளது நாயக்கனேரி ஊராட்சி. இங்கு சுமார் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இம்மலையில் வசிக்கும் மக்கள் அனைத்து தேவைகளுக்கும் ஆம்பூர்தான் வந்து செல்ல வேண்டும். ஆம்பூர் வனச்சரக எல்லை ஆரம்பிக்கும் பகுதியில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலைவசதி ஏதும் கிடையாது.

குண்டும், குழியுமாகவும், கற்கள் பெயர்ந்தும் வெறும் கற்களால் ஆன சாலை போல் காட்சி அளித்து வந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் நடந்து செல்லக்கூட அவதிப்பட்டு வந்தனர். இதனால் மலைவாழ் மக்கள் அந்த 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை வசதி அமைக்க கோரி கடந்த 40 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். மேலும் சம்பந்தப்பட்ட இடம் வனத்துறை வசம் இருப்பதால் இதுவரை சாலை அமைக்க வனத்துறை அனுமதி மறுத்து வந்தது. இதனால் மலைவாழ் மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

சாலை அமைக்க ரூ.90 லட்சம் ஒதுக்கீடு

பொதுமக்களின் தொடர் போராட்டம் மற்றும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பாலசுப்பிரமணி ஆகியோரின் முயற்சியால் நாயக்கனேரி மலைக்கு செல்லும் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்க அரசு ரூ.90 லட்சம் ஒதுக்கீடு செய்தது.

அதைத் தொடர்ந்து சாலை அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. ஆர்.பாலசுப்பிரமணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை நடத்தி, சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜோதிராமலிங்கராஜா, கூட்டுறவு சங்க தலைவர் ஆர்.வெங்கடேசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாக்கியம், ஆம்பூர் வனச்சரக அலுவலர் ஜெயபால் மற்றும் ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

40 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று சாலை அமைக்கும் பணி தொடங்கியதால் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story