திருப்பூருக்குட்பட்ட பகுதிகளில் தங்கியிருக்கும் நைஜீரியர்கள் குறித்த கணக்கெடுப்பை தொடர்ந்து நடத்த வேண்டும் பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை


திருப்பூருக்குட்பட்ட பகுதிகளில் தங்கியிருக்கும் நைஜீரியர்கள் குறித்த கணக்கெடுப்பை தொடர்ந்து நடத்த வேண்டும் பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 3 March 2017 4:15 AM IST (Updated: 2 March 2017 10:00 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூருக்குட்பட்ட பகுதிகளில் தங்கியிருக்கும் நைஜீரியர்கள் குறித்த கணக்கெடுப்பை தொடர்ந்து நடத்த வேண்டும்

திருப்பூர்,

அதிகரிக்கும் நைஜீரியர்கள்

இந்திய அளவில் முக்கிய தொழில் நகரமாக திருப்பூர் இருந்து வருகிறது. திருப்பூர் மாநகருக்கு தொழில் தேவைக்காக கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டினர் அதிக அளவு வரத்தொடங்கினார்கள். முதலில் பெருமைக்குரியதாக கருத்தப்பட்டு வந்தாலும் இந்த வெளிநாட்டினர் வருகை திருப்பூர் பின்னலாடை வர்த்தகர்களை பெரும் கவலையடைய செய்துள்ளது. திருப்பூருக்குட்பட்ட பகுதிகளில் கென்யா மற்றும் நைஜீரிய நாட்டை சேர்ந்தவர்கள் அதிக அளவு வந்துள்ளனர். திருப்பூருக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் நைஜீரியா நாட்டை சேர்ந்தவர்கள் சுமார் 800–க்கும் மேற்பட்டவர்கள் தங்கி இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இதில் பலர் நைஜீரியர்கள் தங்கள் விசா காலம் முடிந்தும் ராயபுரம், காதர்பேட்டை என குறிப்பிட்ட சில இடங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கி இருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் சுற்றுலா விசாவில் திருப்பூருக்கு வந்து இங்கு தயாரிக்கப்படும் பனியன் ஆடைகளை வாங்கி தங்கள் நாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். இது மட்டுமல்லாமல் சில நைஜீரியர்கள் திருப்பூரில் உள்ள நபர்களின் பெயரில் பின்னலாடை தயாரிப்பு நிறுவனங்களையும் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2009–ம் ஆண்டு விசா இல்லாமல் திருப்பூரில் தங்கியிருந்த 42 பேரை போலீசார் கைது செய்தனர்.

குற்ற செயல்களில் ஈடுபடும்...

ஆனால், இதன் பின்னர் முறைகேடாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர் மீது எந்த நடவடிக்கையும் போலீசார் மேற்கொள்ளவில்லை. இதனால் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்த நைஜீரியர்களின் எண்ணிக்கை தற்போது ஆயிரத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது. இதில் 50–க்கும் மேற்பட்ட பெண்களும் அடங்குவார்கள். இவர்களில் சிலர் குடும்பத்துடன் திருப்பூரில் தங்கி இருக்கின்றனர். நைஜீரியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அவர்கள் தொடர்ந்து குற்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

பெண்களை கேலி செய்தல், ஆட்டோ ஓட்டுனர்களிடம் தகராறு, பொது இடங்களில் தகராறு செய்தல் உள்ளிட்ட செயல்களிலும் ஈடுபட்டு வருவதால் திருப்பூர் பொதுமக்கள், வர்த்தகர்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். கடந்த ஒருசில வருடங்களுக்கு முன் திருப்பூர் காலேஜ் ரோட்டில் ஒரு அறை எடுத்து அதில் நைஜீரியர்கள் மதுபான பார் நடத்தி வந்தனர். பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அங்கு சென்று ஆய்வு செய்து அதில் இருந்த பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் தற்போது திருப்பூருக்குட்பட்ட பகுதிகளில் குடியிருக்கும் நைஜீரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட நிர்வாகமும் போலீஸ் துறையும் முன்வர வேண்டும் என்று பொதுமக்களும், காதர்பேட்டை பகுதி வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கணக்கெடுப்பை தொடரவேண்டும்

இதுகுறித்து காதர்பேட்டை பனியன் ஆடை வியாபாரிகள் கூறியதாவது;–

கடந்த ஒருசில வருடங்களுக்கு முன்பு ஒரு சில நைஜீரியர்களே சுற்றுலா விசா, கல்வி விசாவில் வந்து திருப்பூரில் தங்கி இருந்தனர். பின்னர் நாளுக்கு நாள் அதிகளவு நைஜீரியர்கள் வர தொடங்கினார்கள். தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இங்கு தங்கி இருக்கின்றனர். அவர்கள் திருப்பூரில் உள்ள தமிழ் பெண்களை திருமணம் செய்து கொண்டு இங்கேயே தங்கி இருக்கின்றனர். இதுமட்டுமின்றி இருசக்கரம், 4 சக்கர வாகனங்களில் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் தாராளமாக வலம் வருகின்றனர். அவர்களுக்கு எப்படி புதிய கார்கள், மோட்டார் சைக்கிள்கள் கிடைக்கிறது, உரிமம் எவ்வாறு பெறுகின்றனர் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதை போலீசார் கண்டும், காணாதது போலவே இருந்து வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க திருப்பூர் உள்நாட்டு உற்பத்தியாளர்கள், வியாபாரிகளுக்கு போட்டியாக பின்னலாடை வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூரில் உள்ள பிராண்டட் ஆடைகளை போன்றே, அதே பெயரில் தரம் குறைந்த ஆடைகளை தயாரித்து விற்பனை செய்கின்றனர். இவர்கள் வர்த்தக ரீதியாக திருப்பூர் வியாபாரிகளுடன் சில நேரங்களில் பிரச்சினைகளிலும் ஈடுபடுவதுண்டு. இதற்கு திருப்பூரில் உள்ள பலர் உறுதுணையாக இருந்து வருகின்றனர். மொழி பிரச்சினை ஒரு புறம் இருக்க, வெளிநாட்டவர்களுக்கு நமது நாட்டில் பல்வேறு சலுகைகளும், பாதுகாப்பும் அதிகம் இருப்பதால் அவர்கள் திருப்பூர் வியாபாரிகளையோ, போலீசாரையோ, பொதுமக்களையோ ஒரு பொருட்டாக எடுத்து கொள்வது இல்லை. இதனால் போலீசார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நைஜீரியர்களின் கணக்கெடுக்கும் பணியையும், ஆவணங்கள் சரிபார்க்கும் பணியையும் மீண்டும் தொடர வேண்டும். விசா மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருக்கும் நபர்களை கைது செய்து நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story