வெள்ளகோவில் அருகே போலீஸ் எனக்கூறி மூதாட்டியிடம் 6 பவுன் தங்கசங்கிலி ‘அபேஸ்’


வெள்ளகோவில் அருகே போலீஸ் எனக்கூறி மூதாட்டியிடம் 6 பவுன் தங்கசங்கிலி ‘அபேஸ்’
x
தினத்தந்தி 3 March 2017 4:15 AM IST (Updated: 2 March 2017 10:03 PM IST)
t-max-icont-min-icon

வெள்ளகோவில் அருகே போலீஸ் எனக்கூறி மூதாட்டியிடம் 6 பவுன் தங்கசங்கிலியை ‘அபேஸ்‘ செய்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகிறார்கள்.

வெள்ளகோவில்,

மூதாட்டி

வெள்ளகோவில் அருகே உள்ள பாப்பம்பாளையத்தை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (வயது 70). இவரது கணவர் இறந்துவிட்டார். இந்நிலையில் சம்பவத்தன்று வள்ளியம்மாள் வீட்டில் இருந்து தோட்டத்திற்கு, வெள்ளகோவில்–முத்தூர் ரோட்டில் நாச்சியப்பகவுண்டன் வலசு ஊர் பிரிவு அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் டிப் டாப் உடை அணிந்து வந்தனர். அவர்கள் வள்ளியம்மாளிடம் “தாங்கள் இருவரும் போலீஸ்காரர்கள்“ எனக்கூறியுள்ளனர். மேலும், இப்போது தான் ஒரு பெண்ணிடம் மர்ம நபர் நகையை பறித்துக்கொண்டு ஓடிவிட்டான்.

தங்கசங்கிலி அபேஸ்

எனவே உங்களது கழுத்தில் கிடக்கும் தங்க சங்கிலியை கழற்றி கொடுங்கள். அதனை நாங்கள் பாதுகாப்பாக காகிதத்தில் பொதிந்து தருகிறோம் எனக்கூறியுள்ளனர். இதனை உண்மை என நம்பிய வள்ளியம்மாள் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்கசங்கிலியை கழற்றி கொடுத்துள்ளார். அதனை வாங்கிய மர்ம ஆசாமிகள் பொதிந்து கொடுத்துள்ளனர். பின்னர் பாதுகாப்பாக செல்லும்படி கூறிவிட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் சென்று விட்டனர்.

இதனைத்தொடர்ந்து வள்ளியம்மாள் பொட்டலத்தை பிரித்து பார்த்த போது அதில் கற்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே இது குறித்து வெள்ளகோவில் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பர்ட், சப்–இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து, மூதாட்டியிடம் போலீஸ் எனக்கூறி 6 பவுன் தங்கசங்கிலியை அபேஸ் செய்த மர்ம ஆசாமிகளை தேடிவருகிறார்கள்.


Next Story