திருப்பூரில் வருகிற 12–ந்தேதி கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் ரெயில் மறியல் போராட்டம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருப்பூர் மாவட்ட குழு சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பூர்,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருப்பூர் மாவட்ட குழு சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், பாசனத்திற்காகவும் பவானி ஆறு மற்றும் அமராவதி அணையில் உள்ள தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆறு மற்றும் அணைக்கு வரும் தண்ணீரை தடுக்கும் விதமாக வழித்தடங்களில் கேரள அரசு தடுப்பணைகளை கட்டி வருகிறது. தமிழ்நாடு தற்போது வரலாறு காணாத கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், குடிநீர் தட்டுப்பாட்டால் பொது மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கேரள அரசு தடுப்பணைகளை கட்டு வருவது நியாயம் அற்ற செயலாகும். இதனால் தமிழக அரசு நதிநீர் உரிமையை பாதுகாக்க உடனடியாக சட்ட பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு உச்ச நீதிமன்றத்தின் மூலம் தடையாணை பெற வேண்டும். மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைத்து நதிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் வருகிற 12–ந்தேதி காலை 10 மணிக்கு திருப்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.