நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்கான காரணங்களை கண்டறிய ஆய்வுக்குழு அமைப்பு போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை


நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்கான காரணங்களை கண்டறிய ஆய்வுக்குழு அமைப்பு போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை
x
தினத்தந்தி 3 March 2017 4:00 AM IST (Updated: 2 March 2017 10:26 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளுக்கான காரணங்களை கண்டறிய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.

தேனி,

தொடர் விபத்துகள்

தேனி மாவட்டத்தில் தேனி–கம்பம் நெடுஞ்சாலை, தேனி–போடி நெடுஞ்சாலைகளில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதில் உயிர் இழப்புகளும் அதிக அளவில் ஏற்படுகின்றன. அதுமட்டுமின்றி தேனி–பெரியகுளம் சாலை, தேனி–மதுரை சாலைகளிலும் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

தேனி–போடி சாலையில் கோடாங்கிபட்டி, ஒத்தவீடு, போடி விலக்கு போன்ற இடங்களிலும், தேனி–கம்பம் சாலையில் வீரபாண்டி, உப்பார்பட்டி விலக்கு, கோட்டூர், எஸ்.பி.எஸ். காலனி, சீலையம்பட்டி ஆகிய இடங்களிலும் தொடர் விபத்துகள் நடந்து வருகின்றன. மாவட்டம் முழுவதும் விபத்துகளை தடுக்க போலீசார் தொடர் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் விபத்துகள் அடிக்கடி நடப்பதால் விபத்துகளுக்கான காரணங்களை கண்டறிந்து, உரிய தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் நிர்வாகம் திட்டமிட்டது.

ஆய்வுக்குழு அமைப்பு

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின் பேரில், நெடுஞ்சாலைகளில் விபத்துகள் ஏற்படுவதற்கான காரணங்களை கண்டறிய ஆய்வுக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. சப்–இன்ஸ்பெக்டர்கள், போலீசாரை உள்ளடக்கியதாக இந்த ஆய்வுக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆய்வுக்குழுவினர் நெடுஞ்சாலைகளில் காலை, பகல், மாலை, இரவு என அனைத்து வேளைகளிலும் பயணம் செய்து, விபத்துகள் அபாயம் நிறைந்த இடங்கள், விபத்துகள் ஏற்படுவதற்கான காரணங்களை கண்டறியவும், சமீபத்தில் தொடர் விபத்துகள் நடந்த இடங்களில் விபத்துகள் ஏற்பட்டதற்கான காரணங்களை கண்டறியவும் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டு உள்ளார். இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் பயணம் செய்தும் ஆய்வு செய்ய உள்ளனர்.

ஆய்வு அறிக்கை

ஒரு வார காலத்த்துக்கு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. ஆய்வைத் தொடர்ந்து, ஆய்வு அறிக்கை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும். பின்னர் இதுதொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடத்தி, விபத்துக்கான காரணங்களை ஆராய்ந்து, விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story