பிளஸ்–2 பொதுத்தேர்வு தொடங்கியது: மாவட்டத்தில் 42,066 மாணவ– மாணவிகள் எழுதினார்கள்


பிளஸ்–2 பொதுத்தேர்வு தொடங்கியது: மாவட்டத்தில் 42,066 மாணவ– மாணவிகள் எழுதினார்கள்
x
தினத்தந்தி 3 March 2017 4:30 AM IST (Updated: 2 March 2017 11:37 PM IST)
t-max-icont-min-icon

பிளஸ்–2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது.

விழுப்புரம்,

பிளஸ்–2 பொதுத்தேர்வு

தமிழகம் முழுவதும் பிளஸ்–2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று மொழி பாடங்களில் முதல் தாள் தேர்வு நடந்தது. விழுப்புரம் வருவாய் மாவட்டத்தில் 268 பள்ளிகளில் இருந்து 112 தேர்வு மையங்களில் மொத்தம் 42 ஆயிரத்து 66 மாணவ– மாணவிகள் தேர்வை எழுதினார்கள்.

இதில் திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 49 மையங்களில் மொத்தம் 16 ஆயிரத்து 343 மாணவ–மாணவிகளும், விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 29 மையங்களில் மொத்தம் 11 ஆயிரத்து 882 மாணவ–மாணவிகளும்,, கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் 34 மையங்களில் மொத்தம் 13 ஆயிரத்து 841 மாணவ–மாணவிகளும் தேர்வு எழுதினர். இவர்களை தவிர 5 மையங்களில் தனித்தேர்வர் 1,520 பேர் தேர்வு எழுதினார்கள்.

ஆர்வமுடன் தேர்வு எழுதினார்கள்

தேர்வு மையங்களில் சரியாக 10 மணிக்கு மாணவ– மாணவிகளுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டது. என்னென்ன கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன என்பதை படித்து பார்ப்பதற்காக கூடுதலாக 10 நிமிடம் ஒதுக்கப்பட்டது. பின்னர் 10.10 மணிக்கு விடைத்தாள்கள் வழங்கப்பட்டவுடன் அதில் மாணவ– மாணவிகள் தங்களது பெயர், பள்ளியின் பெயர் உள்ளிட்ட விவரங்களை எழுத 5 நிமிடம் ஒதுக்கப்பட்டு 10.15 மணிக்கு தேர்வு தொடங்கியது. மாணவ– மாணவிகள் ஆர்வமுடனும், அதே நேரத்தில் மகிழ்ச்சியாகவும் தேர்வு எழுதினார்கள். தேர்வு மதியம் 1.15 மணிக்கு முடிவடைந்தது.

பார்வையற்ற மாணவர்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பிளஸ்–2 பொதுத்தேர்வை 5 பார்வையற்ற மாணவ–மாணவிகளும் எழுதினார்கள். இதில் செஞ்சி புனித மைக்கேல் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் 2 மாணவிகளும், பனையபுரம் அரசு பள்ளி தேர்வு மையத்தில் ஒரு மாணவியும், கண்டமங்கலம் அரசு பள்ளியில் ஒரு மாணவரும், கம்பியாம்புலியூர் சிகா பள்ளியில் ஒரு மாணவரும் தேர்வு எழுதினார்கள். பிரெய்லி முறையில் படித்து வந்த இவர்களுக்கு தேர்வை எழுத தனியாக அறை ஒதுக்கப்பட்டது. அங்கு ஆசிரியர்கள், வினாத்தாளை அவர்களுக்கு படித்து காட்டினர். பார்வையற்ற மாணவ– மாணவிகள் அதை புரிந்துகொண்டு அதற்குரிய விடைகளை கூறினார்கள். அதை அந்த ஆசிரியர்கள் விடைத்தாளில் எழுதினார்கள். இது தவிர கை, கால் ஊனமுற்ற 46 மாணவ–மாணவிகளும் தேர்வு எழுதினர். இதில் கை ஊனமுற்ற மாணவ–மாணவிகள் தேர்வு எழுத ஆசிரியர்கள் உதவி புரிந்தனர். மற்ற மாணவ–மாணவர்களை காட்டிலும் பார்வையற்ற மற்றும் கை, கால்கள் ஊனமுற்ற மொத்தம் 51 பேருக்கு கூடுதலாக 1 மணி நேரம் கால அவகாசம் வழங்கப்பட்டது.

தேர்வை கண்காணிக்கும் பணியில் முதன்மை அறை கண்காணிப்பாளர்கள், தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், துறை அலுவலர்கள் என 2,500 பேரும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் தலைமையிலும், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் அடங்கிய 330 பறக்கும் படை குழுவினரும் ஈடுபட்டனர்.

கலெக்டர் பார்வையிட்டார்

விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, காமராஜ் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் நடைபெற்ற பிளஸ்–2 தேர்வை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டார். அப்போது தேர்வு மையங்களில் தடையில்லா மின்சார வசதி கொடுக்கப்பட்டுள்ளதா எனவும் மாணவ– மாணவிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளனவா எனவும் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், மாவட்ட கல்வி அலுவலர் மோகன், வருவாய் ஆய்வாளர் சாதிக், கிராம நிர்வாக அலுவலர் கலைவாணி சைலஜா ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story