மே மாதம் இறுதி வரை போதுமான தண்ணீர் இருப்பு உள்ளது பெங்களூருவில் குடிநீர் பிரச்சினை இருக்காது மந்திரி கே.ஜே.ஜார்ஜ் சொல்கிறார்
மே மாதம் இறுதி வரைக்கு தேவையான தண்ணீர் இருப்பு உள்ளதாகவும், எனவே பெங்களூருவில் குடிநீர் பிரச்சினை இருக்காது என்றும் மந்திரி கே.ஜே.ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
மே மாதம் இறுதி வரைக்கு தேவையான தண்ணீர் இருப்பு உள்ளதாகவும், எனவே பெங்களூருவில் குடிநீர் பிரச்சினை இருக்காது என்றும் மந்திரி கே.ஜே.ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
தண்ணீரை சிக்கனமாக...கோடையில் பெங்களூருவில் குடிநீர் பிரச்சினை உண்டாவதை தடுப்பது குறித்து பெங்களூரு நகர வளர்ச்சித்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பெங்களுரு நகர எம்.எல்.ஏ.க்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். அதன் பிறகு மந்திரி கே.ஜே.ஜார்ஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
காவிரி ஆற்றுப்படுகையில் உள்ள அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளது. அதனால் பெங்களூரு நகரவாசிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். நகரில் குடிநீர் பிரச்சினை உள்ள பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சிலர் தனியார் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்கிறார்கள். அதை உடனடியாக நிறுத்தினால் தண்ணீர் பிரச்சினை உண்டாகும். அதனால் அவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
100 ஆழ்குழாய் கிணறுகள்குடிநீர் வினியோகத்தின்போது தண்ணீர் கசிந்து வீணாகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகரில் 100 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்படும். பெங்களூருவில் புதிதாக சேர்க்கப்பட்ட 110 கிராமங்களில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் பணியை மாநகராட்சி ஏற்றுள்ளது. இதற்காக ரூ,.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ள பகுதிகளில் உடனடியாக டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீரை வினியோகம் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
காவிரி ஆற்றுப்படுகையில் உள்ள அணைகளில் தற்போதைக்கு 11.75 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீர் இருப்பு உள்ளது. இது குடிநீருக்கு கிடைக்கும். இதன் அடிப்படையில் மே மாதம் இறுதி வரைக்கு பெங்களூருவில் குடிநீர் வினியோகம் செய்ய தேவையான நீர் இருப்பு உள்ளது. எனவே கோடையில் பெங்களூருவில் குடிநீர் பிரச்சினை இருக்காது.
இவ்வாறு மந்திரி கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.