வேடசந்தூர் அருகே வெறிநாய் கடித்து குதறியதில் 6 ஆடுகள் பலி
வேடசந்தூர் அருகே வெறிநாய் கடித்து குதறியதில் 6 ஆடுகள் பரிதாபமாக இறந்தன.
வேடசந்தூர்,
வெறிநாய் கடித்து 6 ஆடுகள் பலிதிண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்பகுதியில் மழை இல்லாததால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் ஆடு, மாடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வேடசந்தூர் அருகே உள்ள மரியமங்களபுரத்தில் பழனியப்பன் என்பவர் 30 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று விட்டு இரவில் வீடு திரும்பினார்.
பின்னர் வீடு முன்பு உள்ள மூங்கில் பட்டியில் ஆடுகளை அடைத்து விட்டு, பழனிச்சாமி தூங்கச் சென்றார். இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணிக்கு வெறிநாய் ஒன்று பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறியது. ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு பழனியப்பன் வீட்டுக்கு இருந்து வெளியே ஓடி வந்தார். பட்டியில் ஆடுகளை வெறிநாய் கடித்து குதறி கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே வெறிநாயை விரட்டினார். பின்னர் பட்டிக்குள் பார்த்த போது 6 ஆடுகள் குடல் சரிந்து இறந்து கிடந்தன. 10 ஆடுகள் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுமக்கள் கோரிக்கைதகவலறிந்த ஸ்ரீராமபுரம் கிராம நிர்வாக அலுவலர் ராஜரத்தினம் மற்றும் கால்நடை டாக்டர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அங்கு காயம் அடைந்த ஆடுகளுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்தனர்.
வேடசந்தூர் மற்றும் சுற்றுப்புற கிராமப்பகுதிகளில் வெறிநாய் கடித்து ஆடுகள் பலியாகும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க அந்த பகுதியில் சுற்றித்திரியும் வெறிநாய்களை பிடிக்கவேண்டும். விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.