எகட்டி அணையில் இருந்து ஹாசனுக்கு தண்ணீர் திறப்பு: மாநில அரசை கண்டித்து அணை முன்பு பா.ஜனதாவினர் தர்ணா
மாநில அரசை கண்டித்து எகட்டி அணையின் முன்பு சிக்கமகளூரு நகரசபை தலைவி கவிதா தலைமையில் பா.ஜனதாவினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.
சிக்கமகளூரு,
எகட்டி அணையில் இருந்து ஹாசனுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்ட மாநில அரசை கண்டித்து எகட்டி அணையின் முன்பு சிக்கமகளூரு நகரசபை தலைவி கவிதா தலைமையில் பா.ஜனதாவினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.
எகட்டி அணைஹாசன் மாவட்டம் பேளூர் தாலுகாவில் உள்ளது எகட்டி அணை. இந்த அணையில் உள்ள தண்ணீர் தான் சிக்கமகளூரு, பேளூர் பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த நிலையில் மாநிலத்தில் ஏற்பட்டு உள்ள கடும் வறட்சி காரணமாக எகட்டி அணையின் நீர்மட்டம் குறைந்து போய் உள்ளது.
தற்போது அணையில் ஒரு டி.எம்.சி.க்கும்(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) குறைவாக தான் தண்ணீர் உள்ளது.
இந்த நிலையில் ஹாசன் தாலுகா விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொள்ள எகட்டி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு முன்னாள் பிரதமரும், ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா அணையின் என்ஜினீயருக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தார். இதையடுத்து ஹாசனுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அணையில் குறைந்த அளவு தண்ணீர் உள்ள நிலையில் ஹாசனுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதை கண்டித்து பேளூர் தாலுகாவில் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
போராட்டம்இந்த நிலையில் ஹாசன் தாலுகா விவசாயிகள் எகட்டி அணையில் இருந்து ஹாசனுக்கு தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்குமாறு மாநில அரசிடம் கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மாநில அரசும், எகட்டி அணையில் இருந்து ஹாசனுக்கு 20 நாட்களுக்கு வினாடிக்கு 20 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த நிலையில் அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவிட்ட மாநில அரசை கண்டித்தும், அணையில் இருந்து தண்ணீரை திறக்க கூடாது என்று வலியுறுத்தியும் நேற்று சிக்கமகளூரு நகரசபை தலைவி கவிதா மற்றும் நகரசபை உறுப்பினர்கள், பா.ஜனதா கட்சியினர், கன்னட அமைப்பினர் எகட்டி அணையின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இதுகுறித்து அறிந்த பேளூர் போலீசார் விரைந்து சென்று நகரசபை தலைவி கவிதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அணையில் இருந்து தண்ணீர் திறக்க கூறிய மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பெரிய அளவில் போராட்டம்இதனை தொடர்ந்து நகரசபை தலைவி கவிதா அணையின் என்ஜினீயரிடம் அணையில் இருந்து ஹாசனுக்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று கோரிக்கை விடுத்து ஒரு மனுவை கொடுத்தார். இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பின்னர் நகரசபை தலைவி கவிதா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், அணையில் குறைந்த அளவுதான் தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீர் சிக்கமகளூரு, பேளூருக்கு குடிநீருக்கே போதாது. ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் மாநில அரசு அணையில் இருந்து ஹாசனுக்கு தண்ணீர் திறக்க கூறி இருப்பது சரியல்ல. அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று என்ஜினீயரிடம் மனு கொடுத்து உள்ளேன். இதையும் மீறி அணையில் இருந்து ஹாசனுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டால் சிக்கமகளூருவில் பா.ஜனதா கட்சி சார்பில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.