சென்னையில் இன்னும் பெரும்பாலான கடைகளில் ‘கோக்-பெப்சி’ விற்பனை


சென்னையில் இன்னும் பெரும்பாலான கடைகளில் ‘கோக்-பெப்சி’ விற்பனை
x
தினத்தந்தி 3 March 2017 4:30 AM IST (Updated: 3 March 2017 2:50 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இன்னும் பெரும்பாலான கடைகளில் கோக்-பெப்சி விற்பனை செய்யப்படுகிறது. தங்களிடம் உள்ள இருப்பு தீர்ந்தவுடன் விற்பனையை நிறுத்துவோம் என்று வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.

சென்னை,

அன்னிய நாட்டு மோகம்

நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப உணவு, உடை, குளிர்பானம் என அன்னிய நாட்டு மோகம் நம்மை தொற்றிக் கொண்டது. அதன்படி அமெரிக்காவை சேர்ந்த ‘பெப்சி’, ‘கோக்’ நிறுவனங்கள் தமிழ்நாட்டில் காலடி எடுத்து வைத்தவுடன், உள்நாட்டு குளிர்பான வகைகள் பல காணாமல் போகின. இளநீர், பதனீர், மோர், எலுமிச்சை சாறு, கேழ்வரகு கூழ் ஆகியவை அருந்தும் பழக்கமும் குறைந்து போனது.

அன்னிய நாட்டு குளிர்பானங்கள் பருகுவது உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்று சமூக ஆர்வலர்களும், இயற்கை ஆர்வலர்களும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் அதற்கு உரிய பலன் கிடைக்காமல் இருந்தது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு மீதான தடைக்கு எதிராக மாணவர்களும், இளைஞர்களும் நடத்திய எழுச்சிமிகு போராட்டத்தில், ‘அன்னிய நாட்டு குளிர்பானங்களுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்ற கோரிக்கையும் முன் எழுந்தது.

போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள், இளைஞர்கள், ‘நம் நாட்டின் நீர் ஆதாரங்களை காப்பாற்ற, அன்னிய நாட்டு குளிர்பானங்களை புறக்கணிப்போம்’ என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும் அவற்றை தரையில் ஊற்றி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

வணிகர்கள் ஆதரவு

மாணவர்கள், இளைஞர்களின் இந்த முடிவை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன், பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா ஆகியோர் மனப்பூர்வமாக வரவேற்றனர்.

லாப நோக்கத்தை பார்க்காமல் மார்ச் 1-ந் தேதி (நேற்று முன்தினம்) முதல் தமிழ்நாட்டில் அன்னிய நாட்டு குடிநீர் பாட்டில்கள், குளிர்பான வகைகளை விற்பனை செய்ய மாட்டோம் என்று அவர்கள் திட்டவட்டமாக அறிவித்தனர்.

அதன்படி, சென்னையில் அன்னிய நாட்டு குளிர்பானங்களை வாங்கி விற்பனை செய்வதை வியாபாரிகள் நிறுத்தி வருகின்றனர். தங்களது கடைகள் முன்பு அதற்கான அறிவிப்பு பலகையையும் வைத்துள்ளனர்.

எனினும் வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் வைத்துள்ள ஓட்டல்கள், பேக்கரி, இனிப்பு கடைகள், மளிகை, டீ கடைகள் போன்ற இடங்களில் தொடர்ந்து அன்னிய நாட்டு குளிர்பானம் விற்பனை வழக்கம் போல் நடக்கிறது.

ரெயில் நிலையங்கள், பஸ்நிலையங்கள், விமான நிலையங்களிலும் அன்னிய நாட்டு குளிர்பானங்கள் மும்முரமாக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சில கடைகளில் இருதரப்பு வாடிக்கையாளர்களையும் கவருவதற்காக உள்நாட்டு, அன்னிய நாட்டு குளிர்பானங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது.

70 சதவீதம் வணிகர்கள் புறக்கணிப்பு

தமிழகம் முழுவதும் அன்னிய நாட்டு குளிர்பான வகைகள் விற்பனை முற்றிலும் எப்போது நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜாவிடம் கேட்டதற்கு, அவர் அளித்த பதில் வருமாறு:-

எங்களுடைய சங்கத்தில் 21 லட்சம் வணிகர்கள் உள்ளனர். இதில் 15 லட்சம் வணிகர்கள் அன்னிய நாட்டு குளிர்பான வகைகளை வாங்கி விற்பனை செய்து வந்தனர். மாணவர்களும், இளைஞர்களும் எடுத்த முடிவை வரவேற்று 70 சதவீதம் வணிகர்கள் அன்னிய நாட்டு குளிர்பான வகைகளை விற்பனை செய்வதை முற்றிலும் நிறுத்தி விட்டனர்.

சில கடைகளில் அன்னிய நாட்டு குளிர்பானங்கள் விற்பனை ஆகாமல் காலாவதியாகி உள்ளது. அதனை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் திரும்ப பெறாமல் உள்ளன. மேலும் காலாவதியான குளிர்பானத்திற்கான தொகையை வியாபாரிகளிடம் கேட்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு புகார் அளித்துள்ளோம்.

குளிர்சாதன பெட்டிகள்

உள்நாட்டில் தயாரிக்கப்படும் குளிர்பான வகைகளுக்கு தற்போது முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. அன்னிய நாட்டு குளிர்பான நிறுவனங்கள் வழங்கிய குளிர்சாதன பெட்டிகளை திரும்பப்பெற்று வருவதால், உள்நாட்டு குளிர்பான நிறுவனங்கள் குளிர்சாதன பெட்டி வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளோம்.

வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்கள் கண்ணாடி பொருத்திய குளிர்சாதன பெட்டிகள் வழங்கியதால் கூடுதல் மின்சாரம் செலவு ஏற்பட்டது. இதனால் கண்ணாடி இல்லாத குளிர்சாதன பெட்டிகள் வழங்கும்படி உள்நாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். இதற்காக தமிழ்நாடு, குஜராத் ஆகிய இடங்களில் செயல்படும் உள்நாட்டு குளிர்பான நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

இன்று முக்கிய முடிவு

திரையரங்குகள், பெட்ரோல் நிலையங்களில் அன்னிய நாட்டு குளிர்பான வகைகளை விற்பனை செய்ய வேண்டாம் என்று அந்தந்த சங்கங்களின் உரிமையாளர்களிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.

பிரபல ஓட்டல்களுக்கு 40 சதவீத லாபமும், சூப்பர் மார்க்கெட்டுகள், வணிக வளாகங்களுக்கு 35 சதவீதம் லாபமும் அன்னிய நாட்டு குளிர்பான நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இதனால் அவர்கள் அன்னிய நாட்டு குளிர்பானங்கள் விற்பனையை நிறுத்த முடியாமல் தொடர்கிறார்கள்.

எனவே தமிழகம் முழுவதும் அன்னிய நாட்டு குளிர்பான வகைகள் விற்பனை முற்றிலும் நிறுத்தப்படுவது எப்போது என்பது குறித்து நாளை(இன்று) ஆலோசனை நடத்தி அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூடுதல் சலுகைகள் அறிவிப்பு

கோக்-பெப்சி குளிர்பான வகைகள் விற்பனை செய்து வரும் வியாபாரிகள் சிலர் கூறியதாவது:-

எங்கள் கடையில் பெப்சி- கோக் இருப்பு இருக்கும் வரை அதனை விற்பனை செய்வோம். தீர்ந்தவுடன் விற்பனையை நிறுத்திவிடுவோம். தற்போது கோடைகாலம் தொடங்க உள்ளதால் குளிர்பான நிறுவனங்களின் விற்பனை பிரதிநிதிகள் தினமும் கடைக்கு வந்து ஆர்டர் கேட்கிறார்கள். ஏற்கனவே வழங்கியதை விட கூடுதல் சதவீதம் லாபம் தருகிறோம் என்று பல்வேறு சலுகைகளையும் அறிவிக்கிறார்கள். எனினும் நாங்கள் ஆர்டர் வேண்டாம் என்று திட்டவட்டமாக கூறி வருகிறோம்.

தற்போது தென்மாவட்டங்களில் தயாரிக்கும் உள்நாட்டு குளிர்பானங்களை வாங்கி விற்பனை செய்கிறோம். உள்நாட்டு குளிர்பானத்தில் மக்கள் கூடுதல் சுவையை எதிர்பார்க்கிறார்கள். எனவே அதற்கேற்றாற்போல உள்நாட்டு குளிர்பான நிறுவனங்கள் சுவையை அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

குளிர்பானங்கள் சங்கம் எதிர்ப்பு

தமிழ்நாட்டில் பெப்சி, கோக் ஆகியவற்றிற்கு தடை விதிக்கும் முடிவுக்கு இந்தியன் குளிர்பானங்கள் தயாரிப்பு ஆலைகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:-

பெப்சி மற்றும் கோக் பொருட்களை விற்பனை செய்யமாட்டோம் என்ற தமிழக வணிகர்களின் புறக்கணிப்பு முடிவு துரதிருஷ்டவசமானது. மேலும் வலிமையான பொருளாதார வளர்ச்சிக்கு எதிராகவும், நுகர்வோர் தங்களுடைய விருப்பங்களை தேர்வு செய்து வாங்கும் உரிமைகளை மீறும் வகையிலும் உள்ளது. மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு எதிராக வணிகர்களின் முடிவு உள்ளது. பெப்சி மற்றும் கோக் கம்பெனிகள் ஒருங்கிணைந்து 2 ஆயிரம் குடும்பங்களுக்கு நேரடியாகவும், 5 ஆயிரம் குடும்பங்களுக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு அளிக்கிறது. மேலும் இந்த 2 கம்பெனிகளின் பொருட்களை விற்பனை செய்வதால் ரூ.400 கோடி அளவுக்கு வருவாய் கிடைத்து, 2 லட்சம் சில்லரை விற்பனையாளர்களின் வாழ்வாதாரத்தில் முக்கிய பங்குவகிக்கிறது. மேலும் இந்த 2 கம்பெனிகள் விவசாய உற்பத்திகளை பெருக்கும் வகையிலும், தமிழக விவசாயிகள் நலன் சார்ந்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story