தஞ்சை மாவட்டத்தில் 32 ஆயிரம் மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர்


தஞ்சை மாவட்டத்தில் 32 ஆயிரம் மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர்
x
தினத்தந்தி 3 March 2017 4:15 AM IST (Updated: 3 March 2017 2:51 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் 32 ஆயிரம் மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். தேர்வு எழுதுவதை கண்காணிக்க பறக்கும்படையும் அமைக்கப்பட்டு இருந்தது.

தஞ்சாவூர்,

பிளஸ்-2 தேர்வு

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வுகள் நேற்று தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 31-ந்தேதி வரை நடைபெறு கிறது. தஞ்சை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு 87 மையங்களில் நேற்று தொடங்கியது. இந்த தேர்வினை 13 ஆயிரத்து 973 மாணவர்களும், 17 ஆயிரத்து 346 மாணவிகளும் என மொத்தம் 31 ஆயிரத்து 319 பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.

இது தவிர 3 தனித்தேர்வு மையங்களில் 482 மாணவர்களும், 225 மாணவிகளும் என மொத்தம் 707 தனித்தேர்வர்களும் தேர்வு எழுதினர். தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 32 ஆயிரத்து 26 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.

வினாத்தாள் மையம்

இந்த தேர்வினை கண்காணிக்க முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் என 2 ஆயிரத்து 491 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். தஞ்சை மாவட்டத்தில் 95 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதினர். அவர்கள் தேர்வு எழுத வசதியாக தரைதளத்தில் தேர்வு அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தன. ஊனமுற்றோர், கண் பார்வையற்றோர், காதுகேளாத, வாய்பேச இயலாத மற்றும் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு கூடுதலாக 1 மணி நேரம் ஒதுக்கப்பட்டது. மேலும் அவர்கள் சொல்வதை எழுதுவதற்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

தஞ்சை மாவட்டத்தில் 7 இடங்களில் வினாத்தாள் வைக்கப்பட்டு, 17 காப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வினாத்தாள் மையத்தில் இருந்து 87 தேர்வு மையங்களுக்கும் 22 வாகனங்கள் மூலம் வினாத்தாள்கள் பாதுகாப்புடன் எடுத்துச்செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டன.

கலெக்டர் ஆய்வு

தேர்வு மையங்களில் மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும், தேர்வுகள் சிறப்பான முறையில் நடைபெறுவதை கண்காணிக்கவும், பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களை கொண்ட 174 உறுப்பினர்களை கொண்ட பறக்கும்படையும் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

தேர்வு மையங்கள் அமைந்துள்ள பகுதியில் தடையில்லா மின்சார வசதியும், தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் செல்வதற்கு வசதியாக கூடுதல் பஸ்களும் இயக்கப்பட்டன. தஞ்சை கரந்தையில் உள்ள உமாமகேஸ்வரனார் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வு மையத்திற்கு கலெக்டர் அண்ணாதுரை நேரில் சென்று மாணவர்கள் தேர்வு எழுதியதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி திருவளர்ச்செல்வி மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.


Next Story