ஆர்.எஸ்.மாத்தூர்-விருத்தாசலம் இடையேயான புதிய இருவழி அகல ரெயில்பாதையை அதிகாரிகள் ஆய்வு


ஆர்.எஸ்.மாத்தூர்-விருத்தாசலம் இடையேயான புதிய இருவழி அகல ரெயில்பாதையை அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 3 March 2017 4:15 AM IST (Updated: 3 March 2017 2:52 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.எஸ்.மாத்தூர்-விருத்தாசலம் இடையேயான புதிய இருவழி அகல ரெயில்பாதையை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

ஆர்.எஸ் மாத்தூர்,

திருச்சி-விழுப்புரம் இடையே இருவழி அகல ரெயில்பாதை அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இதில் அரியலூர் ரெயில் நிலையத்தில் இருந்து ஆர்.எஸ்.மாத்தூர் வரை இருவழி அகல ரெயில்பாதை அமைக்கப்பட்டு ரெயில் போக்குவரத்து நடந்து வருகிறது. அதனை தொடர்ந்து ஆர்.எஸ்.மாத்தூர்-விருத்தாசலம் இடையே இருவழி அகல ரெயில்பாதை அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து முடிவடைந்தன.

அந்த ரெயில்பாதையை அதிகாரிகள் ஆய்வு செய்யும் பணி நேற்று நடந்தது. ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன், திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் அகர்வால் மற்றும் அதிகாரிகள் விருத்தாசலத்தில் இருந்து நான்கு சக்கர டிராலியில் புதிதாக அமைக்கப்பட்ட இருவழி அகல ரெயில்பாதையில் பயணம் செய்தவாறே ரெயில்பாதையை ஆய்வு செய்தனர். அப்போது ரெயில்கள் செல்லும்போது அதிர்வுகள் ஏதும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா? என சோதித்து பார்த்தனர். விருத்தாசலத்தில் இருந்து டிராலியில் புறப்பட்ட அதிகாரிகள் ஆர்.எஸ்.மாத்தூர் வரை வந்தனர்.

விரைவில்...

பின்னர் அதிகாரிகள் கூறுகையில், ஆர்.எஸ்.மாத்தூரில் இருந்து விருத்தாசலம் வரை 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள இருவழி அகல ரெயில்பாதையில் விரைவில் ரெயில் போக்குவரத்து தொடங்கும். மேலும் ஆர்.எஸ்.மாத்தூர் ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்று தெரிவித்தனர். முன்னதாக விருத்தாசலம், தாழாநல்லூர், பெண்ணாடம், ஈச்சங்காடு உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story