கன்னியாகுமரியில் கடல் சீற்றம் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து


கன்னியாகுமரியில் கடல் சீற்றம் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து
x
தினத்தந்தி 3 March 2017 4:00 AM IST (Updated: 3 March 2017 2:57 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் பயங்கர கடல் சீற்றம், திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நாள் முழுவது ரத்து செய்யப்பட்டது.

கன்னியாகுமரி,


கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி திருவள்ளுவர் சிலையும் அமைக்கப்பட்டு உள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தர் ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த படகு போக்குவரத்து காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளை இன்றி இயக்கப்படுகிறது.

கடல் சீற்றம்


வழக்கம்போல் விவேகானந்தர் மண்டபத்துக்கு நேற்று காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் படகில் சென்று பார்வையிட்டு வந்தனர். இந்நிலையில் காலை 9.30 மணிக்கு திடீரென்று கடல் சீற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையில் விவேகானந்தர் மண்டபத்துக்கு பார்வையிட சென்ற சுற்றுலா பயணிகளை படகு மூலம் அவசரமாக கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் கடல் சீற்றம் தணிந்ததை தொடர்ந்து பகல் 12.30 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கிறது. அதன்பிறகு மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு கடல் சீற்றம் ஏற்பட்டது. அதைதொடர்ந்து மாலை 4 மணி வரை படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

திருவள்ளுவர் சிலை


கடலின் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை சுற்றியுள்ள கடல் பகுதியில் பாறைகள் இருப்பதால் அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக நாள் முழுவதும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் நேற்று கன்னியாகுமரி வந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதை அறிந்து மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


Next Story