நாகர்கோவிலில் அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


நாகர்கோவிலில் அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 March 2017 4:15 AM IST (Updated: 3 March 2017 2:57 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்,


குமரி மாவட்ட அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த 2 மாதமாக தவணை முறையில் ஓய்வூதியம் வழங்கப்படுவதை கண்டித்தும், மாதந்தோறும் ஓய்வூதியம் மற்றும் பிற பண பலன்களை தரக்கேட்டும் அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நாகர்கோவில் ராணித் தோட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொ.மு.ச. தொழிற்சங்கமும் ஆதரவு தெரிவித்தது.

தொ.மு.ச. தலைவர் ஞானதாஸ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பு தலைவர் சிவலிங்கம் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சிவன்பிள்ளை, ஓய்வு பெற்ற தொழிலாளர் கூட்டமைப்பு நிர்வாகிகள் கோபிநாத், சைமன், பொன்ராஜா, அய்யாத்துரை ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

பின்னர் தொழிலாளர்கள் பொது மேலாளரை சந்தித்து மனு கொடுக்க புறப்பட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், 10 பேரை மட்டுமே மனு கொடுக்க அனுமதிக்க முடியும் என்றனர். அதற்கு ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் நாங்கள் அனைவரும் செல்வோம், இல்லையென்றால் அரசு போக்குவரத்துக்கழக நாகர்கோவில் மண்டல பொதுமேலாளர் அனைத்து தொழிலாளர்கள் முன்னிலையில் ஓய்வூதியம் எப்போது கிடைக்கும் என்பதை தெரிவிக்கச் சொல்லுங்கள் என்றனர். இதையடுத்து பொது மேலாளர் திருவம்பலம் தனது அலுவலகத்தை விட்டு வெளியே வந்து தொழிலாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது மார்ச், ஏப்ரல் மாதம் மட்டும் 15–ந் தேதி ஓய்வூதியம் வழங்கப்படும். மே மாதம் முதல் 1–ந் தேதி ஓய்வூதியம் வழங்கப்படும் என்றார். அதையடுத்து தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story