அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் காட்டுத்தீ 25 ஏக்கர் பரப்பளவிலான சீமார் புல் எரிந்து சாம்பல்


அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் காட்டுத்தீ 25 ஏக்கர் பரப்பளவிலான சீமார் புல் எரிந்து சாம்பல்
x
தினத்தந்தி 3 March 2017 4:30 AM IST (Updated: 3 March 2017 2:58 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் 25 ஏக்கர் பரப்பளவிலான சீமார் புல் எரிந்து சாம்பல் ஆனது.

அந்தியூர்,


ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதி உள்ளது. இந்த மலைப்பகுதியில் புலி, சிறுத்தைப்புலி, யானை, கரடி, காட்டெருமை, புள்ளிமான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அதுமட்டுமின்றி பல அரிய வகை மரங்களும் வளர்ந்து உள்ளன. பர்கூர் மலைப்பகுதியின் மேற்கு பகுதியில் உயரமான அத்திமலை உள்ளது. இந்த அத்திமலை அடர்ந்த வனப்பகுதிகளை கொண்டது ஆகும். அதுமட்டுமின்றி அத்திமலையில் 300 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் சீமார் புல் வளர்ந்து வருகிறது.

ஈரோடு மாவட்டத்திலேயே மிக அதிகமாக சீமார் புல் விளையும் இடமாக அத்திமலை உள்ளது. இங்கு விளையும் சீமார் புல்லை வனத்துறையினர், அந்த மலைப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களால் உருவாக்கப்பட்ட வனக்குழுக்களுக்கு மட்டும் தான் ஏலம் விடுவார்கள். மலைவாழ் மக்கள் நன்றாக காய்ந்த சீமார் புல்லை அறுத்து அதனை சிறு, சிறு விளக்குமாறுகளாக கட்டி விடுவார்கள். இந்த விளக்குமாறுகளை ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கர்நாடக மாநிலம் கர்காகண்டி, மாதேஸ்வரன் மலை, மைசூர், கொள்ளேகால் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் இங்கு வந்து வாங்கி செல்வார்கள். தற்போது அத்திமலையில் சீமார் புல் வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் அத்திமலையில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதுபற்றி வனத்துறையினருக்கு மலைவாழ் மக்கள் தகவல் தெரிவித்தனர். எனினும் இரவு நேரமானதால் வனத்துறையினரால் அத்திமலைக்கு செல்ல முடியவில்லை. பின்னர் நேற்று அதிகாலை 4 மணி அளவில் அந்தியூர் வனச்சரகர் ராமராஜ், பர்கூர் வனச்சரகர் பாலகிருஷ்ணன் மற்றும் 30–க்கும் மேற்பட்ட வனத்துறையினர், ஒன்னமலை, தம்புரெட்டி, ஒசூர், தாமரைக்கரை உள்பட அந்த பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் 100–க்கும் மேற்பட்டோர் அத்திமலைக்கு சென்றனர். இந்த மலை 20 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அத்திமலையை 8 மணி அளவில் சென்றடைந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் சேர்ந்து காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. மூங்கில் மரங்கள் உரசிக்கொண்டதால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது சமூக விரோதிகள் யாரும் தீ வைத்து சென்றார்கள? என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story