புனேயில் தாதா சோட்டாராஜனின் கூட்டாளி கைது 4 துப்பாக்கிகள் பறிமுதல்
புனேயில் தாதா சோட்டராஜனின் கூட்டாளி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 4 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
புனே,
புனேயில் தாதா சோட்டராஜனின் கூட்டாளி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 4 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சோட்டாராஜன் கூட்டாளிமும்பையை சேர்ந்த தாதா சோட்டா ராஜனின் நெருங்கிய கூட்டாளி சுவப்னில் குல்கர்ணி(வயது27). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. தலைமறைவாக இருந்த அவரை போலீசார் வலைவீசி தேடிவந்தனர். இந்தநிலையில், புனே பாலாஜி நகர் பகுதிக்கு சுவப்னில் குல்கர்ணி வர உள்ளதாக புனே குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அங்கு சாதாரண உடையில் சென்று தீவிரமாக கண்காணித்தனர். அப்போது அங்கு ஒரு கார் சந்தேகத்திற்கிடமாக வந்து நின்றது. அந்த காருக்குள் சுவப்னில் குல்கர்ணி இருப்பது தெரியவந்தது.
துப்பாக்கிகள் பறிமுதல்இதையடுத்து போலீசார் துப்பாக்கி முனையில் அந்த காரை சுற்றி வளைத்தனர். மேலும் சுவப்னில் குல்கர்ணியை கைது செய்தனர். போலீசார் காரில் சோதனையிட்ட போது ஒரு தானியங்கி துப்பாக்கி, 3 கைத்துப்பாக்கிகள் மற்றும் 21 தோட்டாக்கள் இருந்ததை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சுவப்னில் குல்கர்ணியை சஹகார் நகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுவப்னில் குல்கர்ணியின் தந்தை குஜராத்தில் ரெயில்வே டிக்கெட் பரிசோதகராக பணிபுரிந்து வந்தவர். சுவப்னில் குல்கர்ணி மும்பை செம்பூரில் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.