கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை முன்னிட்டு இடைக்காட்டூர் திருஇருதய ஆலயத்தில் தொடர் ஆராதனை
மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் பிரசித்தி பெற்ற திருஇருதய ஆலயம் உள்ளது.
மானாமதுரை,
மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் பிரசித்தி பெற்ற திருஇருதய ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை சிறப்பு திருப்பலி நடைபெறுவது வழக்கம். இதில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்தநிலையில் கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியதை அடுத்து, இடைக்காட்டூர் திருஇருதய ஆலயத்தில் இரக்கத்தின் முகம் என்ற பெயரில் தொடர் ஆராதனை நடைபெறுகிறது.
தொடர் ஆராதனையை அருட்தந்தை பிரான்சிஸ் வழிகாட்டுதலின்படி மதுரை உயர்மறை மாநில பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மேலும் தவக்காலம் முடியும் வரை வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 தினங்களில் திருத்தலத்தின் வடபகுதியில் உள்ள சேல்ஸ் பேரவை அரங்கத்தில் தொடர் ஆராதனை நடைபெறுகிறது. தொடர் ஆராதனை விழாவில் நற்கருணை பவனி, இறை இரக்க ஜெபமாலை உள்ளிட்டவைகள் நடைபெறுகிறது. தொடர் ஆராதனை நிறைவை தேவகோட்டை மறைமாவட்ட அதிபர் அருட்தந்தை பாஸ்டின் நடத்தி வைக்கிறார். முன்னதாக நேற்று நடைபெற்ற தொடர் ஆராதனை விழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.