பொது சேவை மையங்களில் இருப்பிடம், வருமான சான்றிதழ்கள் கிடைக்காத நிலை வேலைக்கு விண்ணப்பித்தவர்கள் தவிப்பு
விருதுநகரில் பொது சேவை மையங்கள் மூலம் இருப்பிடம் மற்றும் வருமானம் சான்றிதழ்கள் கிடைக்காத நிலை உள்ளதால் வேலைக்கு விண்ணப்பித்தவர்கள் பெரும் தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.
விருதுநகர்,
பொதுசேவை மையம்தமிழகம் முழுவதும் வருவாய்த்துறையினரால் வழங்கப்படும் வருமானம், இருப்பிடம் மற்றும் சாதி சான்றிதழ்களை பெறுவதற்கு பொதுசேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுசேவை மையங்களில் விண்ணப்பிப்பவர்களுக்கு அதிகபட்சமாக 10 நாட்களுக்குள் இந்த சான்றிதழ்கள் வழங்கப்பட்டுவிடும்.
பழைய நடைமுறைப்படி இச்சான்றிதழ்கள் தேவைப்படுவோர் தாலுகா அலுவலகத்துக்கு நேரில் சென்று விண்ணப்பித்து சான்றிதழ்கள் பெறுவதில் காலதாமதமும், சிரமங்களும் ஏற்பட்டதால் தமிழக அரசு இந்த ஏற்பாட்டை செய்துள்ளது.
கிடைக்காத நிலைவருமானம், இருப்பிடம் மற்றும் சாதி சான்றிதழ்கள் வேலைகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்குத்தான் அவசியமாக தேவைப்படும். விருதுநகர் மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு பலர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த 17–ந்தேதி இந்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசிநாளாகும். இந்த விண்ணப்பங்களுடன் வருமானம், இருப்பிட சான்றிதழ்களை இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
அதற்கு முன்னரே பொதுசேவை மையங்களில் இச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தும் வழங்கப்படாததால் யூனியன் அலுவலகங்களில் சத்துணவு பணிக்காக விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டு வருமானம், இருப்பிட சான்றிதழ்களை பின்னர் சமர்ப்பிக்குமாறு தெரிவித்து இருந்தனர். தற்போது 15 நாட்கள் மேலாகியும் இன்னும் வருவாய்த்துறையினர் சான்றிதழ்களை வழங்காத நிலையே நீடிக்கிறது. அதிலும் குறிப்பாக விருதுநகரில் தான் இந்த பிரச்சினை உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தவிப்புஇதனால் சத்துணவு பணிக்கு விண்ணப்பித்தோர் பெரும் தவிப்புக்குள்ளாகி உள்ளனர். மிகுந்த கால தாமதம் ஏற்பட்டால் விண்ணப்பங்கள் பரிசீலனை தொடங்கப்பட்டு இருப்பிடம் மற்றும் வருமான சான்றிதழ்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்களை தேர்வு குழுவினர் தள்ளுபடி செய்து விடுவார்கள் என்ற அச்சம் இப்பணிக்கு விண்ணப்பித்துள்ள ஏழை, எளிய பெண்களிடம் உள்ளது. அவர்களும் இப்பிரச்சினை குறித்து யாரிடம் முறையிடுவது என்று தெரியாமல் தவித்த வண்ணம் உள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் பொது சேவை மையங்களில் வருவாய்த்துறையினர் வழங்கும் சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்தில் சான்றிதழ்களை வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. வேறு பணிகளுக்கு விண்ணப்பிப்போர் இருப்பிடம் மற்றும் வருமானம் சான்றிதழ்கள் கிடைக்காததால் விண்ணப்பங்கள் கையில் இருந்தும் விண்ணப்பங்களை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தீர்வு காண வேண்டும்சமூக நலத்துறையின் புதிய உத்தரவுப்படி திருமண நிதி உதவி கேட்டு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பங்களுடன் இருப்பிடம் மற்றும் வருமான சான்றிதழ்களை இணைத்து வழங்காவிட்டால் அந்த விண்ணப்பங்கள் மறுக்கப்பட்டு விடும். இதனால் திருமண நிதி உதவி கேட்டு விண்ணப்பிக்க இருக்கும் ஏழை பெண்கள் பலர் விண்ணப்பங்களை கொடுக்க முடியாமல் சிரமத்தில் உள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சினையில் உடனடி கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.