கடலூரில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் வருகிற 7–ந்தேதி நடக்கிறது
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட நிர்வாகிகள் அவசர கூட்டம் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடந்தது.
கடலூர்,
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட நிர்வாகிகள் அவசர கூட்டம் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் மகேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் ரத்தினக்குமரன், பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் துணை தலைவர்கள் ஸ்ரீதரன், பலராமன், பூபாலசந்திரன், ரவிச்சந்திரன், இணை செயலாளர் ராஜேஷ்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கடலூர் வட்டத்தில் கிராம உதவியாளர் நியமனத்தில் நேர்மையாக செயல்பட்ட தாசில்தாரை மாறுதல் செய்தும், தனக்கு வசதியான ஒருவரை அந்த இடத்தில் நியமனம் செய்ய வற்புறுத்தியும், ஒவ்வொரு பணி மாறுதலின் போதும் தலையீடு செய்யும் தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தை கண்டித்து கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 7–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது, முறையற்ற மாறுதல் ஆணையை ரத்து செய்யாவிட்டால் அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.