மேம்பாலத்தில் சென்ற சரக்கு ஆட்டோ திடீரென தீப்பிடித்து 3 பேர் உயிர் தப்பினர்


மேம்பாலத்தில் சென்ற சரக்கு ஆட்டோ திடீரென தீப்பிடித்து 3 பேர் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 4 March 2017 3:15 AM IST (Updated: 3 March 2017 10:55 PM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் நான்குரோடு மேம்பாலத்தில் சென்ற சரக்கு ஆட்டோ திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் டிரைவர் உள்பட 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு தனியார் வீட்டு உபயோக பொருட்கள்(பர்னிச்சர்) விற்பனை நிறுவனத்தில் இருந்து நாற்காலிகளை ஏற்றிக்கொண்டு, சரக்கு ஆட்டோ ஒன்று மதுரையில் உள்ள ஒரு கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தது. சரக்கு ஆட்டோவை சிவகங்கை மாவட்டம் பெரியகண்ணனூர் புதுக்குளம் பகுதியை சேர்ந்த பீட்டர்(வயது 28) ஓட்டினார்.

அந்த பர்னிச்சர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சென்னை காமராஜர் சாலை ஆரியபுரம் பகுதியை சேர்ந்த பெருமாள்(48), ராஜ்(43) ஆகியோர் டிரைவருக்கு அருகில் அமர்ந்து பயணம் செய்தனர்.

தீப்பிடித்து எரிந்தது

நேற்று மாலை பெரம்பலூர் நான்கு ரோடு மேம்பாலத்தில் வந்தபோது சரக்கு ஆட்டோவில் இருந்த வயர்கள் வெப்பத்தினால் இளகின. இதனால் வாகனத்தின் முன்பகுதியில் இருந்து கரும்புகை வெளியே வந்ததால் சந்தேகமடைந்த டிரைவர் பீட்டர் உடனடியாக மேம்பாலத்தின் ஓரத்தில் சரக்கு ஆட்டோவை நிறுத்தினார்.

பின்னர் டிரைவர் உள்பட 3 பேரும் சரக்கு ஆட்டோவில் இருந்து கீழே இறங்கினர். அப்போது சரக்கு ஆட்டோவின் முன்பகுதியில் திடீரென தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் சரக்கு ஆட்டோவின் முன்புற கண்ணாடி வெடித்து சிதறியது. மேலும் ஒரு வகையான எண்ணெய் திரவம் வாகனத்தில் இருந்து வடிந்தது.

தண்ணீரை பீய்ச்சி அடித்து...

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பால்ராஜ் தலைமையில் செந்தில்குமார், இன்பராஜ், ராஜராஜன் உள்ளிட்ட தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். முதல் கட்டமாக அவர்கள் நுரை தணிப்பானை எரிந்து கொண்டிருந்த சரக்கு ஆட்டோவின் மீது தெளித்து, எண்ணெய் கசிவில் தீ பிடிக்காதவாறு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். பின்னர் சரக்கு ஆட்டோவின் முன்புற பகுதியில் தண்ணீரை வேகமாக பீய்ச்சி அடித்து சுமார் ½ மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர்.

மேலும் அங்கு பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து தீ விபத்து ஏற்பட்ட சரக்கு ஆட்டோவின் அருகே தடுப்புகள் அமைத்து போக்குவரத்தை சீர் செய்தனர். இதையடுத்து மேம்பாலத்தில் இருந்து அந்த சரக்கு ஆட்டோவை போலீசார் கீழே இறக்கி அப்புறப்படுத்தினர். இந்த தீ விபத்தில் சரக்கு ஆட்டோவில் இருந்த நாற்காலிகளில் சில எரிந்து சேதமடைந்தன. மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து டிரைவர் பீட்டர் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story