பெரம்பலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பம் 6–ந்தேதி முதல் வினியோகம்
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பம் 6–ந்தேதி முதல் வினியோகம் கல்வி அதிகாரி தகவல்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பம் 6–ந்தேதி முதல் வினியோகம் செய்யப்பட உள்ளது என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனுசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;–
விண்ணப்பங்கள்ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசின் வழிகாட்டுதலின்படி ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 முறையே 29.4.2017 மற்றும் 30.4.2017 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் வருகிற 6–ந்தேதி முதல் 22–ந் தேதி வரையுள்ள நாட்களில் (ஞாயிற்றுக்கிழமை தவிர) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை விற்பனை செய்யப்பட உள்ளன.
இதில் வெங்கடேசபுரம் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர் தனலெட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வெங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி, வி.களத்தூர், அகரம், பெரம்பலூர் புனித மேரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, களரம்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, பாடாலூர் அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஒதியம் வான்புகழ் மேல்நிலைப்பள்ளி, சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில், கட்டணமாக ரூ.50 செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.
23–ந் தேதி வரை அளிக்கலாம்மேலும் மாவட்ட வாரியான விற்பனை மையங்கள் தொடர்பாக விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்திலும் காணலாம். ஒருவருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும். தாள் 1 மற்றும் தாள் 2 ஆகிய இரு தேர்வுகளை எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள் தனித்தனியான விண்ணப்பங்களில் விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வெங்கடேசபுரம் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, துறையூர் சாலையில் உள்ள தனலெட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மையங்களில் வருகிற 6–ந்தேதி முதல் 23–ந் தேதி வரையுள்ள நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை (ஞாயிற்றுக் கிழமை தவிர) அளிக்கலாம். விண்ணப்பங்கள் வாங்கப்பட்ட மாவட்டங்களிலேயே திரும்ப அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒரு மாவட்டத்தில் விண்ணப்பம் பெறப்பட்டிருப்பினும், மற்றொரு மாவட்டத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அளிக்கலாம். ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க போதுமான கால அவகாசம் இருப்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.