‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்துக்கு எதிர்ப்பு: ரெயில் மறியலுக்கு முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது


‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்துக்கு எதிர்ப்பு: ரெயில் மறியலுக்கு முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது
x
தினத்தந்தி 4 March 2017 4:15 AM IST (Updated: 3 March 2017 11:16 PM IST)
t-max-icont-min-icon

‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் ரெயில் மறியலுக்கு முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 14 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ‘ஹைட்ரோ கார்பன்’ என்னும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில், இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் ரெயில் மறியல் போராட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லோகுபிரகாஷ் தலைமை தாங்கினார். ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் மாதையன் முன்னிலை வகித்தார்.

14 பேர் கைது

முன்னதாக ஈரோடு காளை மாட்டு சிலை அருகில் ஒன்று கூடிய நாம் தமிழர் கட்சியினர் அங்கிருந்து, ‘ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யவேண்டும்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக ஈரோடு ரெயில் நிலையம் நோக்கிவந்தனர். பின்னர் அவர்கள் ரெயிலை மறிப்பதற்காக ஈரோடு ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) மோகன், இன்ஸ்பெக்டர்கள் ரவிக்குமார், சிவக்குமார் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் போலீசார் 14 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினார்கள். அதைத்தொடர்ந்து அவர்கள் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.


Next Story