வறட்சியால் வாழைகள் கருகியது: அதிர்ச்சியில் விவசாயி சாவு
அந்தியூர் அருகே வாழை மரங்கள் கருகியதால் அதிர்ச்சி அடைந்த விவசாயி மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
இந்த நிலையில் பயிர் கருகியதால் விவசாயி மயங்கி விழுந்து இறந்த சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:–
ஆழ்குழாய் கிணறுஅந்தியூர் அருகே உள்ள அத்தாணி செம்புளிச்சாம்பாளையம் புதுக்காடு பகுதியை சேர்ந்தவர் சென்னிமலை (வயது 68). விவசாயி. இவருடைய மனைவி செல்வநாயகி (60). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 2 பேருக்கும் திருமணமாகி வெளியூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இவருக்கு சொந்தமான 4 ஏக்கர் தோட்டம் அந்த பகுதியில் உள்ளது. இதில் 3 ஏக்கரில் கதலி ரக வாழை பயிரிட்டு உள்ளார். தொடக்கத்தில் கிணற்று தண்ணீரை வாழைக்கு பயன்படுத்தி வந்தார்.
அந்த பகுதியில் நிலவிய கடும் வறட்சி காரணமாக கிணற்று தண்ணீர் வாழைக்கு போதுமானதாக இல்லை. எனவே அவர் தன்னுடைய தோட்டத்தில் ரூ.3 லட்சம் செலவு செய்து 2 ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தார். ஆனால் 2 ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் இல்லை. இதனால் அவர் மனம் உடைந்தார்.
வாழை மரங்கள் கருகினஇருப்பினும் நம்பிக்கையை இழக்காமல் டேங்கர் லாரி மூலம் தண்ணீர் கொண்டு வந்து வாழைக்கு நீர் பாய்ச்சினார். இந்த தண்ணீரும் வாழைக்கு போதுமானதாக இல்லை. இதன்காரணமாக வாழை மரங்கள் கருகி கீழே சாய்ந்து விழத்தொடங்கின. இதை கண்டதும் அவர் கண்கலங்கினார்.
இதுகுறித்து சென்னிமலை தன்னுடைய மனைவி செல்வநாயகியிடம், ‘3 ஏக்கர் வாழை பயிரிட ரூ.3½ லட்சம், ஆழ்குழாய் கிணறு அமைக்க 3 லட்சம், டேங்கர் லாரி மூலம் தண்ணீர் பாய்ச்சுவதற்காக ரூ.60 ஆயிரம் என மொத்தம் ரூ.7 லட்சத்துக்கு மேல் செலவு ஆகிவிட்டது. கடன் வாங்கி தான் வாழை பயிரிட்டு உள்ளோம். ஆனால் வாழை மரங்கள் கருக தொடங்கி விட்டன. செலவு செய்த பணம் கிடைக்குமா? கடனை திருப்பி கொடுக்க முடியுமா? என்று கூறி வருத்தப்பட்டு உள்ளார்.
சாவுஇந்த நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் அவர் தன்னுடைய தோட்டத்துக்கு சென்று உள்ளார். அங்கு கருகிய நிலையில் இருந்த வாழை மரங்களை கண்டு அவர் மிகவும் கவலை அடைந்தார். அப்போது அவருக்கு அதிர்ச்சியில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். இதைப்பார்த்ததும் உறவினர்கள் அவரை மீட்டு கோபி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சென்னிமலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள், ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாழை மரங்கள் கருகியதால் அதிர்ச்சி அடைந்து விவசாயி ஒருவர் இறந்த சம்பவம் ஈரோடு மாவட்ட விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.