ஊட்டியில் 130 ஆண்டுகள் பழமையான மலைரெயில் என்ஜின் பழுதுபார்க்கும் பணிக்காக குன்னூர் கொண்டு செல்லப்பட்டது
ஊட்டியில் 130 ஆண்டுகள் பழமையான மலைரெயில் என்ஜின் பழுது பார்க்கும் பணிக்காக குன்னூர் கொண்டு செல்லப்பட்டது. இந்த என்ஜின் பழுதுபார்க்கப்பட்டு ஊட்டி முதல் கேத்தி வரை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
ஊட்டி,
ஊட்டியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்து 130 ஆண்டுகள் பழமையான மலைரெயில் என்ஜின் பழுது பார்க்கும் பணிக்காக குன்னூர் கொண்டு செல்லப்பட்டது. இந்த என்ஜின் பழுதுபார்க்கப்பட்டு ஊட்டி முதல் கேத்தி வரை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
மலை ரெயில்ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டபோது, நீலகிரி மாவட்டம் அவர்களது நாட்டில் உள்ள சீதோஷ்ணம் போன்ற காலநிலை நிலவியதால், அவர்கள் இங்கு குடியேற நினைத்தனர். ஆங்கிலேயர்களுக்கு தேவையான கட்டுமான பொருட்கள் உள்பட இதர பொருட்களை கொண்டுவருவதற்கு வாகன உதவி தேவைப்பட்டது. அதற்காக ஆங்கிலேயர்கள் மலை ரெயிலை தேர்வு செய்தனர்.
இதற்காக ரெயில் பாதை அமைக்க 1855–ம் ஆண்டு நீலகிரி ரெயில்வே கம்பெனி தொடங்கப்பட்டது. இந்த கம்பெனிக்கு ராபர்ட் மில்லர் என்பவர் முதல் தலைவராக செயல்பட்டார். அப்போது ரூ.25 லட்சம் முதலீடு செய்யப்பட்டது. இந்த மலை ரெயில் பாதை மொத்தம் 46.61 கி.மீ. தூரம் ஆகும். இதில் மொத்தம் 212 வளைவுகள் உள்ளன. 16 குகைகளும், 31 பெரிய பாலங்களும், 219 சிறிய பாலங்களும் உள்ளன.
யுனெஸ்கோ அந்தஸ்துதற்போது, மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை உள்ள இயற்கை காட்சிகளை கண்டுகளிக்க சுற்றுலா பயணிகளுக்காவே மலைரெயில் இயக்கப்படுகிறது. பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்ட நீலகிரி மலை ரெயிலை யுனெஸ்கோ நிறுவனம் பாரம்பரிய ரெயிலாக அறிவித்து உள்ளது. இந்தியாவில் பெரும்பாலும் நிலக்கரி நீராவி என்ஜின் கைவிடப்பட்டு டீசல் மற்றும் மின்சார ரெயில்களாக இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், குன்னூர்–மேட்டுப்பாளையம் இடையே நீராவி என்ஜின் மூலம் மலை ரெயில் இயக்கப்படுகிறது.
130 ஆண்டுகள் பழமையான என்ஜின்ஆரம்பத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை நிலக்கரி ரெயில் என்ஜினை கொண்டு மலைரெயில் இயக்கப்பட்டது. இதில் 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த நிலக்கரியால் இயங்கும் ரெயில் என்ஜின் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது. பின்னர் சுற்றுலா பயணிகள் பார்வையிடும் வகையில் ஊட்டி ரெயில் நிலையத்தில் அந்த என்ஜின் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நீலகிரி பாரம்பரிய ரெயில் அறக்கட்டளை நிர்வாகி நடராஜ், 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரெயில் என்ஜினை சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மீண்டும் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து இந்த மலைரெயில் என்ஜினை பழுதுபார்த்து மீண்டும் இயக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.
மீண்டும் இயக்க முடிவுஇதனை தொடர்ந்து நிலக்கரியால் இயங்கும் அந்த மலை ரெயில் என்ஜின் பழுதுபார்க்கும் பணிக்காக குன்னூரில் அமைந்து உள்ள ரெயில்வே பணிமனைக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து நீலகிரி பாரம்பரிய ரெயில் அறக்கட்டளை நிர்வாகி நடராஜ் கூறியதாவது:– நிலக்கரி மூலம் இயங்கும் ரெயில் என்ஜினில் கடைசி என்ஜினாக இந்த ரெயில் என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் சுவிட்ஜர்லாந்து நாட்டில் தயாரிக்கப்பட்டு இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது. உலக அளவில் இதுபோன்ற மலைரெயில் என்ஜின் மிக குறைவாகவே உள்ளன. இதன்காரணமாக இந்த மலைரெயில் என்ஜினை கொண்டு ரெயிலை இயக்கினால் இதில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். எனவே இந்த பழமையான ரெயில் என்ஜின் பழுதுபார்க்கப்பட்டு, யுனெஸ்கோ நிறுவனத்தின் உதவியுடன் ஊட்டி முதல் கேத்தி வரை சுற்றுலா பயணிகளுக்காக மட்டும் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.