ஆசிரியர் தம்பதி மீது தாக்குதல்; பொருட்களை தூக்கி வீசிய கும்பல் வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததால் ஆத்திரம்


ஆசிரியர் தம்பதி மீது தாக்குதல்; பொருட்களை தூக்கி வீசிய கும்பல் வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததால் ஆத்திரம்
x
தினத்தந்தி 4 March 2017 3:00 AM IST (Updated: 4 March 2017 12:11 AM IST)
t-max-icont-min-icon

வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததால் ஆத்திரத்தில், ஆசிரியர் தம்பதி மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அந்த வீட்டில் இருந்த பொருட்களை தூக்கி வெளியே வீசிய கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

விக்கிரமசிங்கபுரம்,

வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததால் ஆத்திரத்தில், ஆசிரியர் தம்பதி மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அந்த வீட்டில் இருந்த பொருட்களை தூக்கி வெளியே வீசிய கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

ஆசிரியர் தம்பதி மீது தாக்குதல்

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள ஆறுமுகம்பட்டியை சேர்ந்தவர் அந்தோணி பிரகாசியம்மாள். அவருடைய மகன் டெல்பின் ராஜா அமல். இவர் சென்னையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு சொந்தமான வீட்டில், அருள் லாரன்ஸ் (வயது 36) என்பவர் வசித்து வந்தார். இவர் சென்னையில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அவருடைய மனைவி நந்தினி (32). அம்பையை அடுத்த கல்லிடைக்குறிச்சியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்தநிலையில் வீட்டை காலி செய்து தருமாறு நந்தினியிடம், அந்தோணி பிரகாசியம்மாள் கேட்டுள்ளார். அதற்கு நந்தினி, சில மாத காலம் அவகாசம் தருமாறு கூறி காலி செய்ய மறுத்துள்ளார்.

நேற்று காலையில் அந்தோணி பிரகாசியம்மாள் ஒரு கும்பலுடன் வந்து, வீட்டை உடனடியாக காலி செய்ய கூறியுள்ளார். இதற்கிடையே அருள் லாரன்சும் நேற்று சொந்த ஊருக்கு வந்திருந்தார். வீட்டில் இருந்த அருள் லாரன்ஸ், அவருடைய மனைவி நந்தினி ஆகியோர் அதற்கு மறுத்துள்ளனர். அவர்களுக்கும், அந்தோணி பிரகாசியம்மாள் தரப்புக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் அருள் லாரன்ஸ், நந்தினி ஆகிய இருவரையும் அந்த கும்பல் தாக்கியதாக தெரிகிறது. இதில் காயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். பின்னர் அந்த கும்பல், அந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த கட்டில், பீரோ, டி.வி, பிரிட்ஜ் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் தூக்கி வெளியே வீசியதாகவும் தெரிகிறது.

போலீசில் புகார்

தனது பீரோவில் வைத்திருந்த ரூ.2 லட்சத்தையும், 25 பவுன் தங்க நகைகளையும் காணவில்லை எனவும், தாக்கியது தொடர்பாகவும், வீட்டில் இருந்த பொருட்களை தூக்கி வீசியது தொடர்பாகவும் அருள் லாரன்ஸ் விக்கிரமசிங்கபுரம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடைய அருள் லாரன்ஸ், அவருடைய மனைவி நத்தினி ஆகியோர் தன்னை தாக்கியதாக கூறி அந்தோணி பிரகாசியம்மாளும் அம்பை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அது சம்பந்தமாகவும் விசாரணை நடந்து வருகிறது.


Next Story